உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 01, 2010

கப்பலில் சிக்கி வலைகள் சேதம் கடலூரில் மீனவர்கள் முற்றுகை

கடலூர் : 

                  கடலூரில் மீனவர்கள் விரித்திருந்த வலை கப்பலில் சிக்கி சேதமடைந்ததால், முற்றுகை போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் வஞ்சரம் மீன் பிடிப்பதற்காக, 50 "எப்.ஆர்.பி' ரக விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். 

                 இரண்டு நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் வலையை வீசி காத்திருந்தனர். கடலில் வலை விரித்திருப்பதை தெரிவிக்கும் வகையில், விசைப்படகுகளில் சிவப்பு சுழல் விளக்குகளை எரிய விட்டிருந்தனர். இந்நிலையில் மாலை 6.45 மணிக்கு, கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் இயங்கி வரும் கெம்ப்பிளாஸ்ட் கம்பெனிக்கு 6,000 டன் எடை கொண்ட, "வினைல் குளோரோ மோனமார்' (வி.சி.எம்.,) ரசாயன பொருளுடன் ஜப்பான் நாட்டிலிருந்து சிங்கப்பூர் கப்பல் வந்தது.

                       வலை விரித்த பகுதிக்கு கப்பல் வருவதைக் கண்டு திடுக்கிட்ட மீனவர்கள், "டார்ச்' லைட்டால் சிக்னல் கொடுத்தனர். அதற்குள் கப்பல், வலைகளை அறுத்துக் கொண்டு கடலூர் துறைமுகத்திற்குச் சென்றது. தேவனாம்பட்டினம் ராஜேஷ்(30), தமிழ்ச்செல்வன்(31), ராமையா(60), தனசு (30), சக்கரவர்த்தி(35), மதி(30), திருஞானம்(35), சோனங்குப்பம் சாரங்கன்(62), பாஸ்கர்(43) வலைகள் சேதமடைந்தன. 

                          கப்பலில் வலை சிக்கி இழுத்துச் சென்றதில், படகில் இருந்து விழுந்த பாஸ்கர் என்பவர் முகத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ஒன்பது படகுகளில் இருந்து கரைக்குத் திரும்பிய 30 மீனவர்களும், அறுந்த வலைகளுடன் இழப்பீடு கோரி கப்பலை மறிக்க, சித்திரைப்பேட்டையில் உள்ள "ஜெட்டி' பகுதிக்குச் சென்றனர். அங்கு கெம்ப்பிளாஸ்ட் கம்பெனியின் பாதுகாவலர்கள் அவர்களை  தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், பரபரப்பு நிலவியது.

                           தகவலறிந்த கடலூர் முதுநகர் இன்ஸ்பெக்டர் கோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, நெடுமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, கப்பல் ஏஜன்சி உரிமையாளர் மற்றும் கம்பெனி நிர்வாகத்தினரிடம் பேசி இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து கம்பெனி அதிகாரிகள், கப்பல் ஏஜன்சி ஊழியர்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் மீனவர்களுக்கிடையே கடலூர் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் பேச்சு வார்த்தை நடந்தது. 

                           மாலை 3 மணிக்கு மேலாகியும் சுமூக முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில், சேதமடைந்த வலைகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவில்லையெனில், நாளை (இன்று) காலை 100 விசைப்படகுகளில் சென்று கப்பலை மறிக்கப் போவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior