உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 06, 2010

சிதம்பரம் பகுதியில் 7 நாட்களாக வெள்ளத்தில் மிதக்கும் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்: பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சிதம்பரம்:

                  புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

              காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரே நாளில் 220 மி.மீ மழை கொட்டியதால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடை, சேத்தியாத்தோப்பு மதகு வழியாக 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதால் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

                கடந்த 2 நாட்களாக ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளியங்கால் ஓடை மதகு மூடப்பட்டது. வீராணம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டதால் கிராமங்களில் புகுந்த வெள்ள நீர் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிக்கு வெள்ள அபாயம் நீங்கியது.

               மேட்டூர் அணை நீர்வரத்தை பொறுத்தும் மழை நீர் வந்தால் ஒழிய மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்றாலும் காட்டு மன்னார்கோவில், சிதம்பரம், குமராட்சி, குறிஞ்சிப்பாடி பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியபடி உள்ளது. கடந்த 7 நாட்களாக நெற்பயிர்கள் முழுவதும் வெள்ளத்தில் மிதப்பதால் விவசாயிகள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளனர்.

                நந்திமங்கலம், திருநாரையூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இன்னும் வெள்ளம் சூழ்ந்தபடி உள்ளது. இந்த பகுதிக்கு கிராம மக்கள் படகு மூலம் சென்று வருகின்றனர்.வெள்ளம் வடியாததால் இந்த பகுதியில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்கள் தீவுபோல காட்சி அளிப்பதால் மாவட்ட நிர்வாகத்தினர் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

                தொடர்ந்து தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ளதால் கொள்ளிடம் ஆற்று படுகையில் உள்ள முதலைகள் ஊருக்குள் புகுந்துள்ளது. மேலும் விஷ பூச்சிகளும் சர்வ சாதாரணமாக நடமாடுவதால் பொது மக்கள் பீதியில் உரைந்து போய் உள்ளனர். தொடர் மழை காரணமாக சிதம்பரம் பகுதியில் காய்கறி விலைகள் 2 மடங்காக உயர்ந்துள்ளது. காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் மல்லிகை பூ, சாமந்தி பூ, வெற்றிலை உள்ளிட்ட தோட்ட பயிர்களான சுமார் 500 ஏக்கர் அடியோடு நாசமாகி உள்ளது. எனவே அரசு நேரில் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior