உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 06, 2010

கனமழை: சிப்காட் பகுதி கிராமங்களில் ரசாயனக் கழிவுகள் கலந்தனவா?


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டைப் பகுதி குடிகாடு கிராமத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்.
 
கடலூர்:

              கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் கன மழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரில், ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

               கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 20-க்கும் மேற்பட்ட பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றினால் நிலம், நீர், காற்று மாசுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் உள்ளன. இதனால் குடிகாடு, காரைக்காடு, செம்மங்குப்பம். சங்கிலிக்குப்பம் உள்ளிட்ட 20 கிராமங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிப்காட் ரசாயத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான டன் திடக்கழிவுகள் சேகரித்து வைக்கப்படுகின்றன. 

               இவற்றை பாதுகாப்புடன் வைக்கவும், பாதுகாப்புடன் வெளியேற்றவும் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில், ஏராளமான விதிமுறைகள் உள்ளன. தற்போது பல்வேறு தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான ரசாயனத் திடக்கழிவுகள் பல்வேறு நிலைகளில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. கன மழை காரணமாக இந்த ரசாயனக் கழிவுகள் மழைநீரில் கரைந்து ஆலைகளை விட்டு வெளியேறி, கிராமங்களில் தேங்கியுள்ள நீரில் கலந்து இருப்பதாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் புகார் தெரிவித்தார்.

                    ஏற்கெனவே பல தொழிற்சாலைகள் சட்ட விரோதமாக ஆலைக் கழிவுகளை அருகில் உள்ள உப்பனாற்றில் கலந்தது, பல நேரங்களில் கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது உப்பனாற்று நீரும், சிப்காட் பகுதி கிராமங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் ரசாயனக் கழிவுகளும் அதன்மூலம் கிராமங்களுக்குள் புகுந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் சேகர் கூறியது 

                 ""ரசாயன ஆலைகளின் திடக் கழிவுகள் மழைநீரில் கரைந்து கிராமங்களுக்குள் செல்ல வாய்ப்பில்லை. ஆலைகளில் நூற்றுக்கணக்கான டன்கள் திடக்கழிவுகள் மிகுந்த பாதுகாப்புடன் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. கழிவுகள் மிகுந்த பாதுகாப்புடன் விதிமுறைகளுக்கு உள்பட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள திடக்கழிவுகள் சேமிப்பு இடத்துக்கு அவ்வப்போது கொண்டு போகப்படுகிறது. அங்கு கான்கிரீட்டால் ஆன தொட்டிகளில் அடைத்து மூடப்படுகிறது. எனவே திடக்கழிவுகள் மழைநீரில் கரைந்து செல்ல வாய்ப்பில்லை'' என்றார்.

                 மேலும் சிப்காட் தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் பெரும்பாலும் அடைபட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. இதனால் சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள, பச்சாங்குப்பம் முதல் சங்கிலிக்குப்பம் வரை, காரைக்காடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் உப்பனாற்றில் வடியாமல், தேசிய நெடுஞ்சாலைக்கும் ரயில்வே பாதைக்கும் அருகில் உள்ள விளை நிலங்களில் தேங்கி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

                 பல ஆண்டுகளாக இப் பிரச்னை பேசப்பட்டும், அரசு நடவுடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior