உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 06, 2010

கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் அழுகும் அபாயம்: விவசாயிகள் கவலை


பலத்த மழையால் கடலூர் வேளாண் பல்கலைக்கழக கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் மூழ்கிய நெல் பயிர்.
 
கடலூர்:

                   கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள், 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

                 கடலூர் மாவட்டத்தில் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி பாசனம் மூலம் பயன் பெறுகின்றன. வழக்கமாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்கு, கொள்ளிடம் கீழணையில் இருந்து ஆகஸ்ட் 7-ம் தேதி தான் தண்ணீர் திறக்கப்பட்டது. தாமதமாக தண்ணீர் கிடைத்ததால், கடலூர் மாவட்டக் கடைமடைப் பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கு முன்புதான், சம்பா நடவுப் பணிகள் முடிவடைந்தன. 

              சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெல் நட்டு 10 முதல் 15 நாள்கள் பயிராக உள்ளன. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைவிட, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்கள் மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெய்த மழையினால், கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும் மிகவும் அதிகம் என்று, விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

               பிற மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ளாறு, பரவனாறு, உப்பனாறு, கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை, மணிமுத்தாறு, கெடிலம், பெண்ணையாறு ஆகியவற்றின் வழியாகப் பாய்ந்து ஓடி, வடிகால் வசதியற்ற கடலூர் மாவட்டத்தை வெள்ளக் காடாக மாற்றி விட்டது. இதனால் 250 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. 

              கடலூர் டெல்டா பாசனப் பகுதிகளில் திருநாரையூர், எடையார், பிள்ளையார் தாங்கல், வையூர், கண்டியமேடு, அகரநல்லூர், பெராம்பட்டு, கீழத்திருக்கள்ளிப் பாலை, கோவிலாம் பூண்டி, மீதிக்குடி, கீழ் அணுவம்பட்டு, மடுவங்கரை, நஞ்சைமகத்து வாழ்க்கை, கீழச்சாவடி, பூவாலை, வயலாமூர், எல்லைகுடி, கல்குணம், சின்ன குமட்டி, பி.முட்லூர், கொமட்டிக் கொல்லை மற்றும் இக்கிராமங்களை அடுத்துள்ள பகுதிகளில், 10 முதல் 15 நாள் நெல் பயிர்கள், 8  முதல் 10 நாள்களாகத் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன. இவை 90 சதவீதம் அழுகி வீணாகி விடும் என்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                ""வடகிழக்குப் பருவ மழையால் கடலோர மாவட்டங்களில் இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும் என்று, வானிலை ஆய்வு மையத் தகவலை மேற்கோள் காட்டி, மேட்டூர் அணையே முன்னரே திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரினோம். மேலும் கடலூர் மாவட்டத்தில் பெய்யும் மழையைவிட பிற மாவட்டங்களில் பெய்யும் மழையால், வடிகால் வசதியற்ற, கடலூர் மாவட்ட கடைமடைப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தோம். 

                ஆனால் அதிகாரிகள் எங்கள் ஆலோசனையை புறம் தள்ளினர்.நாங்கள் பயந்தபடி நடந்து விட்டது. சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 25 ஆயிரம் ஏக்கரில் மூழ்கி இருக்கும் பயிர்கள் தேறாது, அழுகிவிடும்'' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior