உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 06, 2010

கடலூரில் கன மழை: இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு

கனமழை மற்றும் சிதம்பரம் அருகே, சனிக்கிழமை நந்திமங்கலம் கிராமத்தில் சாய்ந்து கிடக்கும் சம்பா நெல் பயிர்கள்.

கடலூர்,:

                   கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

             வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. வெள்ளிக்கிழமை லேசாகக் குறைந்திருந்த மழை, இரவில் மீண்டும் பலத்த மழையாக மாறியது. சனிக்கிழமையும் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

                தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்துவோர், கட்டுமானத் தொழிலாளர்கள், சுமை தூக்குவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். வர்த்தக நிறுவனங்களிலும் முறையான வியாபாரம் இல்லை என்று வணிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

              தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பல இடங்களில் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மழை காரணமாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை சரிசெய்ய மின் ஊழியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். தொடர்ந்து மழை பெய்து புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பெருகிய போதிலும் கடலூர் மாவட்டத்தில் தினமும் 2 மணி நேரத்துக்குக் குறையாமல் மின் வெட்டு நீடிக்கிறது.

           தரைவழி தொலைபேசி இணைப்புகளும் பெருமளவுக்கு பழுதடைந்து துண்டிக்கப்பட்டு உள்ளன. மழை காரணமாக இவற்றை உடனடியாகப் பழுதுபார்க்க ஊழியர்களால் முடியவில்லை. 

மீன்பிடி பாதிப்பு: 

           6-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்வரத்து இல்லாததால், மீன் அங்காடிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகள் போக்குவரத்தும், மழை காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் காய்கறிக் கடைகளில் புதிய காய்கறிகள் இன்றி, பழைய வீணாய்ப்போன காய்கறிகளை, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

                    தொடர் மழையால் தோட்டக்கலைப் பயிர்கள் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. இதனால் அங்காடிகளுக்கு வரும் உள்ளூர் காய்கறிகளான வெண்டைக்காய், அவரைக் காய், கத்தரிக்காய் போன்றவை பெரிதும் பூச்சிகள் தாக்கியவைகளாக உள்ளன.

சாலைகள் சேதம்: 

                கடலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளும் கடுமையாகப் பழுதடைந்து உள்ளன. இதனால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், பல இடங்களில் சாலைகள் பழுதடைந்து கிடப்பதால், கிராமங்களுக்குச் செல்லும் பஸ்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டு விட்டன. நகரப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வேர் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

               ஏராளமான நகர்களில், வடிகால் வசதி இன்றி மழைநீர் ஏரி போல் தேங்கி நிற்பதால், பலர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறார்கள். கன மழையால் சாலைகள், தெருக்கள், அங்காடிகள் சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகிறது. இதனால் சாக்கடை, குப்பை கூளங்கள் கலந்து தேங்கிக் கிடக்கும் மழை நீர் மிகவும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. அவற்றில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

                  பள்ளிகள் பலவற்றில் மழைநீர் பெருமளவுக்குத் தேங்கி உள்ளது. தொடர்ந்து கன மழை பெய்வதால், பழைய வீடுகள் பல ஒழுகத் தொடங்கி விட்டன. அரசுக் கட்டடங்களும் மழையினால் பாதிக்கப்பட்டு உள்ளன. 

மழைப் பதிவு: 

கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் முக்கிய ஊர்களில் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

கடலூர் 59. 
கொத்தவச்சேரி 45. 
வானமாதேவி 35. 
புவனகிரி 30. 
காட்டுமயிலூர் 28. 
பரங்கிப்பேட்டை 27. 
அண்ணாமலை நகர் 24.8. 
சிதம்பரம் 22. 
வேப்பூர் 22. 
ஸ்ரீமுஷ்ணம் 20. 
சேத்தியாத்தோப்பு 19. 
குப்பநத்தம் 14.2. 
காட்டுமன்னார்கோயில் 14. 
லால்பேட்டை 14. 
விருத்தாசலம் 10.3. 
பெலாந்துரை 10. 
பண்ருட்டி 10.
மேமாத்தூர் 4. 
கீழ்செறுவாய் 3. 
தொழுதூர் 3.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior