உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 09, 2011

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையில் 15 ஆண்டுகளாக தினக்கூலிகளாக பணிபுரியும் 1,200 பேர்

சிதம்பரம் : 

           பணிமூப்பு பட்டியல் அனுப்பி ஓர் ஆண்டாகியும், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இருப்பதால், பொதுப்பணித்துறையில் 15 ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு, 100 ரூபாய் பெறும் தினக்கூலிகளாக தொடரும் அவலம் உள்ளது.

             பொதுப்பணித் துறையில் எட்டாம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். அலுவலக உதவியாளர்கள் முதல் திட்ட மதிப்பு தயார் செய்யும் பணி வரை ஈடுபடுகின்றனர். 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வது என்பது அரசு ஆணை. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 1,056 பேர், கடந்த ஆறு மாதம் முன் 750 பேர் என பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். 

              ஆனால், 1995ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்தவர்கள் தினக்கூலியாக, நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் மட்டுமே ஊதியம் பெறும் நிலையில், சொல்ல முடியா துயரத்தில் குடும்பம் நடத்தி வருகின்றனர். பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த ஆண்டு சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த 1,200 பேரின் பணி மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

            அதை அதிகாரிகள், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லாததால், கடந்த ஒரு ஆண்டாக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்திலேயே அந்த பட்டியல் கோப்பு தூசு படிந்துள்ளது. பணி நிரந்தரம் செய்யப்பட்டு விடுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்கள், மன வேதனையில் தவித்து வருகின்றனர். தமிழக முதல்வர், தனது பொறுப்பில் வைத்திருக்கும் பொதுப்பணித்துறை தினக்கூலி பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணையை வழங்கி 1,200 குடும்பங்களுக்கும் விளக்கேற்றி வைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior