கடலூர் அருகே சுபஉப்பளவாடி கிராமத்தில் பயிரிடப்பட்டு உள்ள கேந்தி மலர்ச் செடிகள். (வலது படம்) மலர்த் தோட்டத்தில் களை எடுக்கும் பெண்கள்.
கடலூர்:,
கடலூர் உப்பனாற்றங் கரைகளில் உள்ள விவசாயிகள், 2 ஆண்டுகளாக குறுகிய கால மலர் விவசாயத்துக்கு மாறி வருகிறார்கள்.
கடலூர் உப்பனாற்றங்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர், குறைந்த ஆழத்தில் கிடைக்கிறது. இப்பகுதிகளில் இரு போகம் நெல் பயிரிடப்படுகிறது. சம்பா அறுவடைக்குப் பிறகு, கத்திரி, வெண்டைக்காய், வெங்காயம், கொத்தவரங்காய் போன்ற காய்கறிச் செடிகளைப் பயிரிட்டு வந்தனர். 2 ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள், கத்திரி உள்ளிட்ட காய்கறிச் செடிகளுக்குப் பதில், கோழிக்கொண்டை, கேந்தி உள்ளிட்ட குறுகிய கால மலர்ச் செடிகளைப் பயிரிடத் தொடங்கி உள்ளனர்.2009-ம் ஆண்டு 10 ஏக்கரில் மலர்ச் செடிகள் பயிரிட்ட விவசாயிகள், கடந்த ஆண்டு 50 ஏக்கரில் பயிரிட்டனர்.
இந்த ஆண்டு 100 ஏக்கருக்கு மேல், கோழிக்கொண்டை, கேந்தி உள்ளிட்ட மலர்ச் செடிகள் பயிரிட்டு இருப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஓசூர், சத்தியமங்கலம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெருமளவு கேந்தி மலர்ச் செடிகள் பயிரிடப்படுகின்றன.கடலூரை அடுத்த நாணமேடு, உச்சிமேடு, சுபஉப்பளவாடி உள்ளிட்ட கிராமங்களில் 75 ஏக்கரில், இந்த ஆண்டு மஞ்சள், ஆரஞ்சு நிறக் கேந்திச் செடிகள் பயிரிடப்பட்டு உள்ளன. கேந்தி பயிரிடுவதில் ஏக்கருக்கு 4 மாதத்தில் ரூ. 50 ஆயிரம் லாபம் பார்க்க முடியும் என்கிறார் சுபஉப்பளவாடி விவசாயி பாக்கியராஜ்.
n 2 ஆண்டுகளாக இப்பகுதியில் கேந்தி, கோழிக்கொண்டை போனற மலர்ச் செடிகளை விவசாயிகள் பயிரிடத் தொடங்கி உள்ளனர். சம்பா அறுவடை முடிந்தும், முன்பெல்லாம் வெங்காயம், கத்திரி, வெண்டை, கொத்தவரை போன்ற காய்கறிகளைப் பயிரிட்டு வந்தோம். காய்கறிச் செடிகளில் பூச்சித் தாக்குதல் அதிகம் உள்ளது. மேலும் பாசனச் செலவும் கூலியாள்களின் செலவும் அதிகரித்து விட்டது. வேலைக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை.
இதனால் மாற்றுப் பயிராக மலர்ச் செடிகளைப் பயிரிடுகிறோம். கேந்தி மலர் பயிரிட விதை விதைத்து, நாற்று உற்பத்தி செய்து, அவற்றைப் பிடுங்கி நடவேண்டும். 10 கிராம் கேந்தி விதை விலை ரூ. 1,500. ஒரு ஏக்கருக்கு ரூ. 6 ஆயிரத்துக்கு விதை வாங்க வேண்டும். கோவை, ஓசூர் பகுதிகளில் இருந்து விதைகளை வாங்குகிறோம். நட்டு ஒரு மாதத்தில் பூக்கத் தொடங்கும். 3 மாதங்களுக்கு பூக்கள் தொடர்ந்து அறுவடை செய்ய முடியும். தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, பூக்கள் மகசூல் இருக்கும். ஏக்கருக்கு 2 டன் பூக்கள் கிடைக்கும்.
மொத்தத்தில் 4 மாதங்களில் ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் லாபம் கிடைக்கும். கடலூர் அருகில் உள்ள கிராமங்களில் உற்பத்தியாகும் கேந்தி மலர்கள் அனைத்தும் கடலூர் மற்றும் புதுச்சேரி மாநில பூ வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பை, வேளாண்துறை ஏற்படுத்திக் கொடுத்தால், கூடுதல் விலை கிடைக்கும். மேலும் பல விவசாயிகள் கேந்தி மலர்ச் செடிகளைப் பயிரிடத் தயாராக இருக்கிறார்கள் என்றார் பாக்கியராஜ்.
இதுகுறித்து கடலூர் பூ வணிகர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
மாலைகள் கட்டுவதற்கு, கேந்திப் பூக்களின் தேவை எப்போதும் இருக்கிறது. சாதாரணமாக கிலோ ரூ. 25 முதல் ரூ.30 வரை விலை கொடுத்து வாங்குகிறோம். பல நேரங்களில் கிலோ ரூ. 80 வரை விலை உயர்ந்துவிடும்.கடலூருக்கு ஆந்திராவில் இருந்து கேந்தி மலர்கள் அதிகம் வருகின்றன. ஓசூரில் இருந்தும் கிடைக்கின்றன. ஆந்திரா கேந்தி மலர்கள் பெரியதாகவும், அழகாகவும் உள்ளன. 3 ஏக்கரில் கேந்தி பயிரிட்டு, 4 மாதத்தில் ரூ. 5 லட்சம் லாபம் அடைந்து இருப்பதாக ஆந்திர விவசாயி ஒருவர் தெரிவித்தார். எனவே கடலூர் விவசாயிகள் கேந்தி பயிரிடத் தொடங்கி இருப்பது நல்ல முயற்சியாகத் தெரிகிறது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக