கடலூர்:
நாடுகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே, ஜாதி, மதங்களுக்கு இடையேயும் அனைத்துக்கும் மேலாக மனித மனங்களுக்கு இடையேயும் இணைப்புப் பாலம் வேண்டும் என்பது, மனித சமுதாயத்தின் தீராத ஆசையாக இருந்து வருகிறது.
நாகரீகம் மிக்க சமுதாயத்தில் இத்தகைய இணைப்புப் பாலங்கள் நிறைய தேவை. ஆனால் கடலூரில் மது குடிப்பவர்களுக்காகவே ஒரு பாலம் கட்டப்பட்டு, அது எத்தனை முறை வீழ்ந்தாலும், மீண்டும் மீண்டும் சரி செய்யப்பட்டு விடுகிறது. கடலூர் மாவட்டத்தையும் புதுவை மாநிலத்தையும் பிரிப்பது பெண்ணை ஆறு. கடலூர் - புதுவையை இணைக்கும் வகையில், பெண்ணை ஆற்றின் குறுக்கே ஏற்கெனவே சில பாலங்கள் உள்ளன. மேலும் பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த பாலங்கள் மற்றவர்களுக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, கடலூர் மாவட்ட மதுப் பிரியர்களுக்கும், மது கடத்துவோருக்கும் பெருமளவில் உதவியாக இருக்கிறது. கடலூர் - ஆராய்ச்சிக்குப்பம் (புதுவை மாநிலம்) இடையே இத்தகையை பாலம் இல்லாத நிலையில் மதுப் பிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, புதுவை மாநில சாராய விற்பனையாளர்களே மணல் பாலம் ஒன்றை நிரந்தரமாக அமைத்துக் கொடுத்து வந்தனர்.மாலை நேரங்களில் இப்பாலத்தின் வழியாக நூற்றுக்கணக்கான கடலூர் மதுப்பிரியர்கள், ஆராய்ச்சிக்குப்பம் சென்று குறைந்த விலையில் மது அருந்திவிட்டு வருவதை படத்தில் காணலாம். இந்த இடத்தில் பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணையுடன் கூடிய பாலம் ரூ.12 கோடியில் கட்டும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது.
வடகிழக்குப் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இந்த பாலத்தின் இரு கோடியிலும் கடுமையான நில அரிப்பு ஏற்பட்டு அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இரு பக்கமும் இணைப்பு இன்றி பாலம் தற்போது தீவாகக் காட்சி அளிக்கிறது. கட்டுமானப் பணிகளுக்காக போடப்பட்டு இருந்த மணல் தடுப்பணையும் சிதைந்து விட்டது. இதனால் ஆராய்ச்சிக்குப்பம் செல்லும் மதுப்பிரியர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். இதனால் தாற்காலிக பாலாமாவது அமைய வேண்டும் என்று மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்தனராம். கோரிக்கையை ஏற்று சவுக்குக் கழிகளால் ஆன தாற்காலிகப் பாலம் உடனே தயாராகி விட்டது.
போர்க்கால அடிப்படையில் மழை வெள்ளப் பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அடிக்கடி கோரிக்கை வைக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் போர்க்கால அடிப்படையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். போர்க்கால் அடிப்படையில் என்ற சொற்றொடருக்கு, உண்மையான எடுத்துக் காட்டு, மதுப் பிரியர்களுக்காக அமைக்கப்பட்ட கடலூர் - ஆராய்ச்சிக்குப்பம் தாற்காலிக பாலமாகத்தான் இருக்குமோ?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக