வாட் வரி உயர்வின் காரணமாக செல்போன்கள் விலை ரூ.100 முதல் ரூ. 2000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் ஜூலை 12-ம் தேதி முதல் இந்த விற்பனை வரி விகிதங்கள் அமலுக்கு வந்தன. இதனால் 4 சதவீத மதிப்புகூட்டு வரி பட்டியலில் இருந்த செல்போன்களுக்கான வரி 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் சந்தையில் செல்போன்களின் விலை அதிரடியான விலை ஏற்றத்தைக் கண்டுள்ளன.
அனைவரும் வாங்கும் வகையில் இருந்த நோக்கியாவின் ஆரம்பக்கட்ட மாடலின் விலை கடந்த வாரம் ரூ.960-ல் இருந்து புதிய வரிவிதிப்பின் காரணமாக ரூ.1058-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், நோக்கியாவின் விலை உயர்ந்த மாடலான ஈ-7 செல்போன் கடந்த வாரம் ரூ.25,471-ல் இருந்து ரூ.27,700-ஆக உயர்ந்துள்ளது.
இந்த மதிப்புகூட்டு வரி விகிதத்தால் செல்போன் விற்பனை சந்தையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மயிலாப்பூரில் உள்ள செல்போன் விற்பனையாளர் ஓருவர் கூறியது:"
விற்பனை வரி உயர்வினால் நடுத்தர வர்க்கத்தினர் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பலர் "டச் போன்களை' விரும்புகின்றனர், ஆனால் சாம்சங் நிறுவனத்தின் குறைந்தப்பட்ச டச் போன் கடந்த வாரம் ரூ.3850-ல் இருந்து ரூ.4300-ஆக விலை உயர்ந்துள்ளது. சாம்சங் அண்மையில் அறிமுகப்படுத்திய விலை உயர்ந்த "காலக்ஸியின்' விலை ரூ.29,900-ல் இருந்து ரூ.32,800-ஆக உயர்ந்தது. டச் போன்களில் சுமார் 23 வகையான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ள சாம்சங்கின் விற்பனை, வரி விதிப்பினால் ஓரளவு பாதிக்கப்பட கூடும்' என்றார் அவர்.
தொழிலதிபர்கள், மேலதிகாரிகள் அதிகமாகப் பயன்படுத்தும் "பிளாக் பெரியின்' ஆரம்பக்கட்ட விலை ரூ.9,610-ல் இருந்து ரூ.11,110-ஆகவும், அதிகபட்சம் ரூ.28,292 விலை கொண்ட மாடல் ரூ.31,092-ஆகவும் உயர்ந்துள்ளது. இவ் வகையான போன்களை மேல்தட்டு மக்கள் அதிகம் பயன்படுத்துவதால் பிளாக் பெரியின் விற்பனையில் பாதிப்பு ஏற்படாது என சென்னையில் உள்ள விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது, பல முன்னணி செல்போன் விற்பனையாளர்கள் ஆடி தள்ளுபடி அறிவித்துள்ளதால் விற்பனையில் மந்த நிலை ஏதும் இருக்காது என ஒரு தரப்பினர் கூறினர்.
இது குறித்து அண்ணா நகரைச் சேர்ந்த செல்போன் உபயோகிப்பாளர் ரித்தீஷ் கூறியது:
இன்றைய உலகில் செல்போன்கள் அத்தியாவசியப் பொருளாக ஆகிவிட்டது. எனவே பெட்ரோல், டீசல் போல எத்தனை முறை விலை ஏற்றினாலும் மக்களின் செல்போன் உபயோகம் குறையாது. இதனால் செல்போன் மீது மதிப்புகூட்டு வரியை தமிழக அரசு உயர்த்தியதில் தவறில்லை' என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக