உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 18, 2011

புகையில் புகைகிறது கடலூர் நகரம் : புற்றுநோய் ஏற்படும் அபாயம்

கடலூர் கெடிலம் ஆற்றின் கரையில் எரிக்கப்படும் குப்பைகள்.
கடலூர்:

            குப்பைகளை அகற்ற எந்தத் திட்டமும் இல்லாமல், கொளுத்தப்படும் குப்பைகளால் கடலூர் நகரம் சுகாதாரக் கேட்டில் புதையுண்டு வருகிறது. சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்டது கடலூர் நகராட்சி.

              நகராட்சியின் அருகில் உள்ள சில கிராமங்களை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக்கும் முயற்சி ஓராண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டு, நின்று போயிற்று. சுகாதாரம் கெட்டுச் சீர்குலைந்து கிடக்கும் இந்த நகராட்சியுடன் இணையத் தயாரில்லை என்று, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கடலூர் தொடர்ந்து பின்தங்கிய நிலையில் இருப்பது, நகர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. 

               மக்கும் குப்பை மக்காத குப்பை என்றெல்லாம் அவ்வப்போது பேச்சு அடிபடுகிறது. ஆனால் குப்பைகளை அகற்றுவதற்கு, நவீன அறிவியல் பூர்வமான திட்டங்கள் எதுவும், கடலூர் நகராட்சியிடம் இல்லை என்பதுதான் கடலூர் மக்களின் துரதிருஷ்டம். கடந்த 5 ஆண்டுகளில் இந்நகராட்சியின் 45 வார்டு உறுப்பினர்களும், அவர்களின் தலைவரும் அடிக்கடி கூடிக் கலைந்தார்களே தவிர, மக்களின் சுகாதாரம் பற்றியோ, குப்பைகளை நவீன முறையில் அகற்றுவது குறித்தோ, சற்றேனும் சிந்திதார்களா என்றால் இல்லை என்பதுதான் கடலூர் நகர மக்களின் குற்றச்சாட்டு. 

                 குப்பைகளை சேகரித்து தரம் பிரித்து, உரமாக மாற்றும் திட்டத்துக்கு, குண்டுசாலையிலும், கடலூர் முதுநகரிலும் சுமார் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட திடக்கழிவு மேலாண்மை கட்டடங்கள், கட்டியநாள் முதல் செயலிழந்து கிடக்கிறது. கம்மியம்பேட்டையிலும், பச்சையாங்குப்பத்திலும் நகராட்சி குப்பை கொட்டும் இடங்கள், மேற்கொண்டு குப்பை கொட்ட இடமில்லாத அளவுக்கு, நிரம்பி வழிந்துகொண்டு இருக்கிறது. குப்பைகளை அகற்றத் திட்டம் ஏதும் இல்லாததால், இந்த இரு இடங்களிலும், சுமார் 1 லட்சம் டன் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. 

               இந்நிலையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட 8 வார்டுகள் உள்ளிட்ட 45 வார்டுகளிலும், குப்பைகள் அகற்றும் பணிக்கு 200க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் இருந்தும், துப்புரவுப் பணி முறையாக நடைபெறவில்லை. பிரதானச் சாலைகளில் குப்பைகளை ஓரளவுக்கு அகற்றுகிறார்களே தவிர, மற்றத் தெருக்களில் அகற்றுவதே இல்லை. தொழிலாளர்கள் திடீரென்று ஞானோதயம் பெற்றவர்கள்போல் சில தெருக்களுக்கு வருவதும், குப்பைகளை கூட்டி, அங்கேயே சில இடங்களில் போட்டு தீவைத்து எரிப்பதும், கடலூரில் வாடிக்கையான செயல். கடலூர் நகரில் ரயில்வே மேம்பாலத்தின் இரு முனைகளிலும் டயர்களைப் போட்டுக் கொளுத்துவதால் உருவாகும் புகை, வானில் 100 மீட்டர் வரை உயர்ந்து நிற்பதை அனுதினமும் காணமுடியும். 

             அதே போல் கெடிலம் மற்றும் பெண்ணை ஆற்றங்கரைகளில், நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி அங்கேயே எரிப்பதும் அன்றாட நிகழ்வாயிற்று. இதனால் காலை நேரங்களில் கடலூர் நகரமே புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. பல தெருக்களில் காலை முதல் மாலை வரை குப்பைகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. தெருக்கள் எப்போதும் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கின்றன. தெருக்களில் நகர மக்கள் வைத்து வளர்க்கும் மரங்கள் பலவும் இதனால் எரிந்து பட்டுப்போகிறது என்கிறார், நகர அனைத்துக் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன்.

                 குப்பைகளை அகற்ற நவீன, அறிவியல் பூர்வமான திட்டமோ அதுபற்றிய சிந்தனையோ கடலூர் நகராட்சியிடம் இல்லாததே இதற்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். 

குப்பைகளை எரிப்பது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா கூறுகையில், 

             டயர்களைக் கொளுத்துவதால் ஏற்படும் டயாக்ஸின் என்ற நச்சுப் புகையை சுவாசிப்போருக்கு, புற்றுநோய், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை, நுரையீரல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும். குப்பைகளை எரிக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. பெரும்பாலான குப்பைகள் பாலித்தீன் பொருள்கள் கலந்தவை. அவற்றை எரிப்பதால், சுற்றுச்சூழல் மாசு படுவதுடன், மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வரும் என்றார் அவர்.










0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior