கடலூர்:
கடலூர் பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக, ரூ. 10 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆய்வு செய்தார்.
கடலூரில் ரூ. 65.14 கோடியில் குடிநீர் வடிகால் வாரியத்தால், 3 ஆண்டுகளுக்கு மேலாக, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்.சி. சம்பத் அமைச்சர் பொறுப்பு ஏற்றதும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் விரைவு படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லியும் பாதாளச்சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளார். வாரம் தோறும் குறிப்பிட்ட பணிகளை முடிக்கா விட்டால், கான்ட்ராக்டருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்து உள்ளார். இத்திட்டத்தில் ரூ. 10 கோடியில் பிரமாண்டமான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், தேவனாம்பட்டினத்தில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை அமைச்சர் எம்.சி. சம்பத் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
சுத்திகரிப்பு நிலையப் பணிகள் 86 சதம் முடிவடைந்து இருப்பதாகவும், கடலூரில் இன்னும் 20 ஆண்டுகளில் இருக்கப் போகும் மக்கள் தொகையைக் கணக்கிட்டு அதற்கேற்றார்ப்போல், பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டத்தில் 5,702 ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட வேண்டும். இதில் 5,474 குழிகள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. 7 கழிவு நீர் உந்து நிலையங்களின் பணிகளில் 6 முடிக்கப்பட்டு உள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் தேவனாம்பட்டினத்தில் ரூ. 10 கோடியில், 6.6 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் அமைச்சர் எம்.சி. சம்பத் கூறுகையில்,
கடலூர் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படத் தொடங்கியதும், 5 ஆண்டுகள் பராமரிப்புப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியமே மேற்கொள்ளும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு 12.50 எம்.எல்.டி. கழிவு நீர் சுத்திகரிக்கப்படும். கடலூர் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, 1-11-2011 முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். பின்னர் வில்வநகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை அமைச்சர் சம்பத் பார்வையிட்டார். குடியிருப்பில் பூங்கா மற்றும் இணைப்புச் சாலை அமைத்துக் கொடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரினர். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இணைப்புச் சாலை அமைத்துத் தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கடலூர் தேவனாம்பட்டினம் கிராம மக்களும் அமைச்சர் எம்.சி. சம்பத்தை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தனர். தேவனாம்பட்டினத்தில் நகராட்சி குடிநீர் குழாய்களின் அருகில், கழிவுநீர் குழாய்கள் செல்வதால், குடிநீரில் சாக்கடை கலக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர். இப்பிரச்னைக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காணுமாறு, நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அமைச்சரின் நிகழ்ச்சிகளில் குடிநீர் வாரிய செயற்பொறியாளர் ரகுநாதன், நகராட்சி ஆணையர் இளங்கோவன், பொறியாளர் ரூபன் சுரேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ. முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ. கோ. அய்யப்பன், அ.தி.மு.க. தொகுதிச் செயலாளர் சுப்பிரமணியன், நகரச் செயலாளர் குமரன், ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக