உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 08, 2011

கடலூரில் உலக தாய்ப்பால் வார விழா: அமைச்சர்கள் எம்.சி. சம்பத், செல்வி ராமஜெயம் பங்கேற்பு

கடலூர்:

            குழந்தைகளுக்கு பெண்கள் தாய்ப்பால் கொடுக்க மறுப்பது, தமிழ் கலாசாரத்துக்கே எதிரானது என்று, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார். உலக தாய்ப்பால் வார விழா கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 

விழாவில் அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது: 

                பெண்களுக்கான சிறந்தத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து உள்ளார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் பெண்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய, பிரசவகால விடுப்பு அளித்து இருக்கிறார். ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறவேண்டும் என்பதற்காக, கருவுற்ற தாய்மார்களுக்கு உதவித்தொகையை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி இருக்கிறார் முதல்வர். இது 3 தவணையாக வழங்கப்படும். 

              கருவுற்ற காலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை உண்டு, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதே, இத்திட்டத்தின் நோக்கம். தாய்ப்பால் கொடுப்பதால் வளரும் குழந்தைகள், முழு அறிவு மிக்கவர்களாக, ஆரோக்கியமானவர்களாக வளர்ந்து சமுதாயத்துக்கு நன்மை பயப்பார்கள். தாய்ப்பால் கொடுக்க மறுப்பது தமிழ் கலாசாரத்துக்கே எதிரானது. முத்துலட்சுமி ரெட்டியும், வேலு நாச்சியாரும் பிறந்த தமிழ் மண்ணில், பெண் சிசுக்கொலை என்பதை நினைத்துப் பார்க்க முடிவில்லை. கடலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பெண் சிசுக் கொலை கூடாது என்று நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். பெண் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். அவர்கள்தான் பிற்காலத்தில் உலக அரங்கில் சாதனைகள் பல புரிந்து, ஜொலிக்கப் போகிறார்கள் என்றார் அமைச்சர்.

விழாவுக்குத் தலைமை வகித்து சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், "

                குழந்தைகளுக்குத் தாய்ப்பால், 2 வயது வரையிலும் கொடுக்கலாம். இதனால் குழந்தைகள், அறிவுமிக்கவர்களாக, ஆரோக்கியமானவர்களாக வளருவார்கள். பெண்களின் திருமண வயது 18-ஆக இருந்த போதிலும், உடல் ஆரோக்கியம், குடும்ப சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றை எண்ணிப் பார்க்கும்போது, பெண்களுக்கு 21 வயதில் திருமணம் என்பதே சரியாக இருக்கும் என்றார்.

           உலக தாயப்பால் வார விழாவையொட்டி, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, அமைச்சர் எம்.சி. சம்பத் பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஊட்டச்சத்து திட்ட அலுவலர் அன்பழகி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், மருத்துவத் துறை இணை இயக்குநர் மனோகரன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.மீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior