உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 08, 2011

கடலூர் மாவட்டத்தில் பாலித்தீனுக்கு பதில் சணல் பைகளை பயன்படுத்த ஆட்சியர் கோரிக்கை


கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற, சணல் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு முகாமில் பேசுகிறார், மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி. (வலது படம்)
கடலூர்:

           பாலித்தீன் பைகளுக்குப் பதில், சணல் பைகளைப் பயன்படுத்துங்கள் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி வேண்டுகோள் விடுத்தார்.  

                தேசிய சணல் வாரியம் மற்றும் கோவை சணல் சேவை மையம் ஆகியன தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, சணல் பொருள்கள் பற்றிய விழிப்புணர்வு முகாமை கடலூரில் சனிக்கிழமை நடத்தின.  

முகாமைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது: 

               சணல் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த சணல் பொருள்களை அனைவரும் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.  சணலைக் கொண்டு ஏராளமான பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்ய முடியும். மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பலர் தொழில் தொடங்கக் கடன் வேண்டும் என்று கேட்கிறார்கள்.  ஆனால் என்ன தொழில் செய்யப் போகிறீர்கள்? என்று கோட்டால், 98 சதவீதம் பேரிடம் இருந்து பதில் வருவது இல்லை.  

                மகளிர் சுயழுதவிக் குழுக்கள், முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.÷சணலை மூலப் பொருளாகக் கொண்டு, பல்வேறு பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய நல்ல வாய்ப்பு உள்ளது.  அதற்காக சணல் வாரியம் 3 கட்டப் பயிற்சிகளை அளிக்கத் தயாராக உள்ளது. பாலித்தீன் பைகளைத் தவிர்த்து அதற்கு மாற்றாக சணல் பைகளைப் பயன்படுத்தலாம். சணலை மூலப்பொருளாகக் கொண்டு, துணிகள், கைவினைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் பலவற்றையும் தயாரிக்கலாம். அதன்மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.  

              பெண்கள் சணல் பொருள்கள் தயாரிக்கும் தொழிலை, ஆர்வமுடன் கற்றுக் கொண்டு, சிறுதொழில்களைச் செய்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர். சணல் சேவை மைய அதிகாரி எம்.ராமசாமி, சணல் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் பற்றி விளக்க உரை நிகழ்த்தினார். உலகில் சணல் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் இடம் வகிக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 160 லட்சம் டன் சணல் உற்பத்தி செய்யப்படுகிறது. சணல் பொருள்கள் சுற்றுச்சூழலைப் பாதிக்காது.  

           பிளாஸ்டிக் பொருள்களின் வரவு, சணல் பொருள்களின் விற்பனையைப் பாதிக்கிறது. சணலை தரம் உயர்த்தப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும் என்று ராமசாமி குறிப்பிட்டார். நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் எஸ்.ராஜகோபாலன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வெங்கடாச்சலம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய மேலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பேசினர்.  மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பலர் முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சணல் பொருள்கள் தயாரிப்பு குறித்து விளக்கிக் கூறப்பட்டது.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior