கடலூர், நவ. 23:
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தரமற்றதாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புப் பேரவை கோரிக்கை விடுத்து உள்ளது.
பேரவையின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் திங்கள்கிழமை தமிழ முதல்வர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அலுவலர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனு: பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பஸ்கள், வேன்கள், ஆட்டோக்கள், தரமற்றவைகளாக உள்ளன. பள்ளிப் பணிக்குச் செல்லும் வாகனங்களை ஓட்டுவோர் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று போக்குவரத்து விதிகளில் உள்ளது. ஆனால், அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள்தான் அதிக அளவில் வாகனங்களை இயக்குகிறார்கள். விதிகளின்படி மஞ்சள் வண்ணம் பூசாமலும், மாநிலம் விட்டு மாநிலம், மாவட்டம் விட்டு மாவட்டம் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக ஏற்றுகிறார்கள். போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் இதைக் கண்டு கொள்வதில்லை. பெயருக்கு சில வழக்குகளைப் போட்டுவிட்டு தங்கள் கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள். மேலை நாடுகளில் மாணவர்கள் தங்களது பெற்றோர் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளிலேயே பயில வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதனால் விபத்துகள் தவிர்க்கப் படுகின்றன. குழந்தைகளின் பயண நேரம் குறைகிறது. அவர்களுக்குள் சண்டை குறைகிறது. கல்வி நிறுவனங்களிடையே போட்டா போட்டியும் குறைகிறது. இந்தியாவிலும் அண்மைப் பள்ளிகள் திட்டத்தை சட்டமாக மத்திய அரசு இயற்றி இருக்கிறது. தமிழகத்தில் இச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அருகாமையில் உள்ள பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளைச் சேர்க்க வேணடும். இதனால் அந்தந்த பகுதிகளில் தரமான பள்ளிகள் உருவாகும் பல குழந்தைகளின் உயிரை எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்றார் நிஜாமுதீன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக