சட்டப்பேரவை, மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு மகளிர் காப்பீட்டுகழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட உழைக்கும் மகளிர் மாநாடு கண்டனம் தெரிவித்துள்ளது. காப்பீட்டுக் கழக 14-வது உழைக்கும் மகளிர் மாநாடு கடலூரில் சனிக்கிழமை நடந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 100 நாள்களில், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவோம் என்று தெரிவித்தது. ஆனால் இந்த மசோதா குறித்து தற்போது வாய் திறப்பதோ இல்லை. மத்திய அரசின் அலட்சியப் போக்கை மாநாடு கண்டிக்கிறது. இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். ஊரக வேலை உறுதி சட்டத்தில் பெண்களுக்கு ஊதியம் முழுமையாக வழங்கப்பட வேண்டும், பேறுகால விடுப்பில் தேவைக்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அனைத்து எல்.ஐ.சி. அலுவலகங்களிலும் குழந்தைகள் காப்பக வசதி வேண்டும். பெண்களுக்கு ஒழுங்கான ஓய்வறைகள் ஒதுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட இணை அமைப்பாளர் காமாட்சி தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட இணை அமைப்பாளர் எஸ்.ஜெயஸ்ரீ வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் தமிழ்ச்செலவன் தொடக்க உரை நிகழ்த்தினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் வாலன்டீனா, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்டத் தலைவர் தசரதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மகளிர் துணைக்குழு கோட்ட அமைப்பாளர் ஃபிளாரன்ஸ் லிடியா அறிக்கை சமர்ப்பித்தார். கோட்டப் பொதுச் செயலாளர் ராமன் தொகுப்புரை வழங்கினார். புதுவை இணை அமைப்பாளர் திலகம் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக