உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

ஆலப்பாக்கம் மேம்பாலத் திட்டம் கைவிடப்பட்டது ஏன்?

சிதம்பரம், நவ. 17:

சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு இடையே விழுப்புரம்-புதுவை-நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கத்தில் ரயில்வே கேட் உள்ளது.
அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்தில் இங்கு ரூ.17.50 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க இடம் பெற்றுள்ளது.
ஆனால் தற்போது அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவுற்று ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்காமலேயே சாலையை உயர்த்தி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு வரும் இவ்வேளையில் ரயில்கள் ஓடாத நேரத்தில் இங்கு ரயில்வே மேம்பாலத்தை எளிதாக அமைத்திருக்கலாம். தற்போது ரயில்வே நிர்வாகத்தால் மேம்பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது எதனால்? எனத் தெரியவில்லை.
அகல ரயில்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டால் அடிக்கடி ஆலப்பாக்கம் ரயில்வே கேட் மூடப்படும் நிலை உருவாகும். இதனால் கடலூர் மார்க்கத்திலிருந்து ஆலப்பாக்கம் கேட் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கும்.
தற்போது கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை பாலம் சேதமடைந்ததால் கனரக வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவ் வாகனங்கள் ஆலப்பாக்கம் கேட் வழியாக சிதம்பரம் நகருக்குள் புகுந்து செல்கிறது.
இது குறித்து சிதம்பரத்தைச் சேர்ந்த சமூகசேவகர் ஜி.கலியமூர்த்தி விழுப்புரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு டிசம்பர் 2008-ம் ஆண்டு கடிதம் அனுப்பினார்.
அதற்கு கோட்டப் பொறியாளர் டி.ராஜேந்திரன் பதில் தெரிவித்து அனுப்பியுள்ள கடிதத்தில் விழுப்புரம்-புதுச்சேரி- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் ரூ.17.50 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது என பதில் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்-மயிலாடுதுறை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில்பாதையில் ஜனவரி 15-ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பயணிகள் ரயில்கள் இப்பாதையில் இயக்கப்பட்டால் சிதம்பரத்துக்கும், கடலூருக்கும் இடையே உள்ள ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கேட் மூடப்பட்டு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கும் என பஸ் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior