உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 19, 2009

பாழாகி வரும் கடலூர் சாலைகள்

கடலூர்,நவ.17:

பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக கடலூரில் சாலைகள் தோண்டப்படுவதால் சாலைகள் பாழாகி வருகின்றன. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
ரூ. 44 கோடி செலவில் கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை தவிர ஏனைய சாலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக தோண்டப்படும் பள்ளங்களை, வேறு மணல் கொண்டு முறையாக நிரப்பி சாலை அமைக்க ஏதுவாக மாற்றி ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் பாதாளச்சாக்கடைத் திட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆனால் குழிகளை நிரப்புவதில்தான் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தோண்டி எடுக்கப்பட்ட சேறும் சகதியுமான களிமண்ணைக் கொண்டே குழிகளை நிரப்புவதுதான் பிரச்னையாக உள்ளது. மாவட்ட ஆட்சியர், நகராட்சித் தலைவர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தும், இப் பணியைக் ஒப்பந்தம் எடுத்து இருக்கும் நிறுவனம் கண்டு கொள்வதே இல்லை. எந்த உத்தரவையும் காதில் போட்டுக் கொள்வதும் இல்லை, மதிப்பதும் இல்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பாதாளச் சாக்கடைப் பள்ளங்களை, தொடர்ந்து சேற்றால் நிரப்பி வருவதுதான் மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. இவ்வாறு செய்வதால் இரு சக்கர வாகனங்கள் கஷ்டப்பட்டு சென்று கொண்டு இருந்த சாலைகள்கூட மறுநாள் எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு மாறிவிடுகின்றன. மக்கள் நடந்து செல்வதுகூட ஆபத்தான நிலையாகி விடுகிறது.
பள்ளங்களில் ஆற்று மணல் அல்லது கருங்கல் ஜல்லி கிரஷர்களில் வீணாகக் கிடக்கும் கருப்பு மணல் கொண்டு நிரப்ப வேண்டும் என்று உதரவிட்டும், பின்பற்றப் படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதன் விளைவாக சாலைகளில் மக்கள் விழுந்து காயம் அடையாத நாளே இல்லை. பள்ளங்களில் வாகனங்கள் சிக்கிக் கொள்ளாத நாளே இல்லை.
இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்றே தெரியாமல் மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் கைகளைப் பிசைந்து கொண்டு இருக்கிறார்கள்.
பாதாளச் சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளில் மண்டிக் கிடக்கும் சேற்றை முற்றிலுமாக அகற்றிவிட்டு, பள்ளங்களில் கருங்கல் ஜல்லித் துகள்களைக் கொண்டு நிரப்பினாலன்றி, இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடையாது என்று நெடுஞ்சாலைத் துறைக்கும் நகராட்சி நிர்வாகத்துக்கும் தெரிந்து இருந்தும், அது உத்தரவாக ஒப்பந்ததாரரிடம் ஏனோ தெரிவிக்கப்படவில்லை. மழை நின்றால் எல்லாம் சரியாகிவிடும், அதற்கு முன் ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதுதான் சம்பந்தப்பட்ட துறை அலவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரரின் கணிப்பு. அதற்குள் மக்கள் படும் அவதிக்கு தீர்வு காண்பது யார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior