சிதம்பரம்,நவ.17:
சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் ஒன்றியக்குழு அலுவலகத்தை வேளப்பாடி கிராம மக்கள் குடிநீர் கோரி காலி பானைகளுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
சிதம்பரத்தை அடுத்த கண்ணங்குடி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த வேளப்பாடி, வால்காரமேடு, பெரியதெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறு பழுதடைந்ததால் குடிநீரின்றி மக்கள் அவதியுற்றனர். இதையடுத்து புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து ரூ.5லட்சம் செலவில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் எனக் கோரி அப்பகுதி மக்கள் தேவசகாயம் தலைமையில் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் நைனார்நாயுடு உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து 15 தினங்களுக்குள் ஆழ்துளைக் கிணறு அமைப்பதாக உறுதியளித்ததால் மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக