கடலூர், நவ.17:
திட்டக்குடி அரசு நூலகத்தில் வாசகர்களுக்கு குறைந்த கட்டணத்தில் (மணிக்கு ரூ.10) பிராட்பேண்ட் வசதியுடன் கணினிச் சேவை தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட நூலக அலுவலர் அசோகன் தெரிவித்தார்.
திட்டக்குடி அரசு நூலகத்தில் நமது உலகம் நூலக எழுச்சி ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட நூலக அலுவலர் அசோகன் கலந்து கொண்டு பேசியது:
நமது உலகம் நூலக ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் புரவலர் சேர்க்கை நடந்து வருகிறது. திட்டக்குடியில் ரூ.12 லட்சத்திலும், டி.நெடுஞ்சேரியில் ரூ.6 லட்சத்திலும், நூலகக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. மேல்பட்டாம்பாக்கத்தில் ரூ.9 லட்சத்தில் நூலகக் கட்டடம் கட்டும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.
திட்டக்குடி நூலகத்தில் பெண்கள், முதியவர்கள், சிறுவர்களுக்கு எனத் தனித் தனி பிரிவுகள் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் வாசகர்களுக்கு மணிக்கு ரூ.10 கட்டணத்தில் பிராட்பேண்ட் வசதியுடன் கணினிச் சேவை விரைவில் தொடங்கப்படும் என்றார் அசோகன்.
விழாவுக்கு கிளை நூலகர் ராஜசேகரன் தலைமை வகித்தார். தொ.மு.ச. தலைவர் காமராஜ், இளைஞரணிச் செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலர் பரமகுரு புரவலராகச் சேர்ந்தார். நூலகர் சங்கர் வரவேற்றார். உதவி நூலகர் தங்கவேல் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக