கடலூர், டிச. 18:
20 கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற, ரூ.25 கோடி செலவில் வாலாஜா ஏரியை அழப்படுத்த என்.எல்.சி. நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த திட்டத்தை, விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் வற்புறுத்தினர்.
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:
பரவனாறு பாசனம் மற்றும் வடிகால் மேம்பாட்டுச் சங்க செயலாளர் பொறியாளர் அ.ராஜேந்திரன்: கரைகளற்ற பரவனாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களும் விவசாயிகளும் ஆண்டுதோறும் துயரத்தில் ஆழ்த்தப்படுகிறார்கள். 20 கிராமங்கள் ஆண்டுதோறும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன. கரையோரம் உடைப்பெடுத்து, அவற்றை சீரமைக்க ஆண்டுதோறும் ரூ.2 கோடி வரை செலவிடப்படுகிறது. ஆனால் நிரந்தரத்தீர்வு காணப்படவில்லை. அரசுப் பணம் வீணாக செலவிடப்படுகிறது.
தலைப் பரவனாறு பகுதிக்கு உள்பட்ட வாலாஜா ஏரியை ஆழப்படுத்த வேண்டும். இந்த ஏரிக்கு வரும் நீர் தங்காமல் வழிந்தோடி விடுகிறது. வாலாஜா ஏரியைத் தூர்வார என்.எல்.சி. நிறுவனம் ரூ.25 கோடி ஒதுக்கியதாக அறிவிப்பு வந்து 2 ஆண்டுகளுக்குமேல் ஆயிற்று, விரைவில் இப்பணியைத் தொடங்க வேண்டும்.÷பரவனாற்றை ஆழப்படுத்தி கரைகள் அமைத்து 20 கிராமங்களை வெள்ளப்பாழ் நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும். இதன்மூலம் 20 ஆயிரம் விவசாயக் குடும்பங்களும் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் காப்பாற்றப்படும்.
பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன்: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வீராணம் ஏரியின் நீர்மட்டத்தை 44 அடிக்கு மேலும் உயர்த்தியது தவறு. இதனால் ஒரே நேரத்தில் 18 ஆயிரம் கன அடி உபரிநீரை வெளியேற்றும் நிலை ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. எதிர்கரை பகுதியில், 15 கிராமங்களை ஏரி நீர் சூழ்ந்துள்ளது. பாசிமுத்தான் ஓடையில் ரூ. 1 லட்சம் செலவிட்டு 3-வது ரெகுலேட்டரை சீரமைத்ததாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால் அத்தகைய பணி எதுவும் நடக்கவில்லை. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த ஆண்டு உளுந்து விதைத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. போதுமான அளவுக்கு விதை உளுந்து கையிருப்பை அதிகரிக்க வேணடும்.
வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் பெண்ணாடம் சோமசுந்தரம்: பெண்ணாடம் சர்க்கரை ஆலையில் 26 ஆயிரம் டன் கரும்புக்கு டன்னுக்கு ரூ.66 வீதம் சட்ட விரோதமாகப் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு இந்தப் பணத்தைப் பெற்றுத் தரவேண்டும். விருத்தாசலம் திட்டக்குடி தாலுகாக்களில் பட்டா மாறுதல் மனுக்கள் ஏராளமாக நிலுவையில் உள்ளன. அவற்றுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.
விவசாய சங்கக் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன்: அனைத்து விவசாயிகளுக்கும் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் கிடைக்க வேணடும். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளை பொருள்களுக்கும், அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ÷வேறுபல விவசாயிகள் பேசுகையில், அத்திப்பட்டு கூட்டுறவு சங்கத்தில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும. பண்ருட்டி சித்தேரியை ஆழப்படுத்த வேண்டும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கோரினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக