கடலூர், டிச. 18:
வேளாண் விரிவாக்க மையத்தில் வாங்கி விதைத்த நெல்லில், முறையாகக் கதிர் வரவில்லை என்று கடலூரில் நடந்த விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மா வட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அகரம் ஆலம்பாடி உழவர் மன்றத் தலைவர் வேல்முருகன் பேசியது:
சேத்தியாத் தோப்பு வேளாண் விரிவாக்க மையத்தில் பிபிடி விதைநெல் வாங்கி விதைக்கப்பட்டது. சுமார் 20 விவசாயிகள் 50 ஏக்கரில் விதைத்த பிபிடி ரக நெல், தற்போது வளர்ந்து கதிர்வரும் நிலையில் உள்ளது. இவற்றில் பயிர் வீரியமாக வளர்ந்தும், கதிர்வருவது பல்வேறு நிலைகளில் இருப்பதால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தனியார் விற்பனையாளர்களிடம் வாங்கி விதைத்த இதே ரக நெல்லில் இந்தப் பிரச்னை எழவில்லை என்றும் வேல்முருகன் கூறினார். பாதிக்கப்பட்ட நெல்பயிரையும் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் காண்பித்தனர்.
பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் பேசியது:
இரு வகையான பயிர்களைச் சேர்த்த ஓட்டுரக நெல்விதை இது. மரபணு மாற்றத்தில் ஏற்பட்ட குறைபாடாக இருக்கலாம். இத்தகைய விதைகளை சோதனை வயல்களில் நடவு செய்து பார்த்து, பின்னர் விவசாயிகளுக்கு வழங்கி இருக்க வேண்டும்.
இதுகுறித்து வேளாண் துறை நடவடிக்கை எடுக்கும். விதை நெல் எங்கிருந்து வாங்கப்பட்டது என்று தெரிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக