பண்ருட்டி, டிச. 18:
விற்பனைக்காக கடைகளில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான மற்றும் உற்பத்தி தேதியில்லாத உணவுப் பொருள்களை, பண்ருட்டி நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து வெள்ளிக்கிழமை அழித்தனர்.
பண் ருட்டி நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரி தலைமையில் சுகாதார அலுவலர் பாலசந்திரன் உள்ளிட்ட ஊழியர்கள் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்களில் நகரப் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது காலாவதியான மற்றும் உற்பத்தி தேதி, விலாசம் இல்லாத மளிகைப் பொருள்கள், நெய், எண்ணெய் வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
அ தன் பின்னர் நிருபர்களிடம் ஆணையர் கே.உமாமகேஸ்வரி கூறியது: பொது சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் பண்ருட்டி நகரப் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டோம். இரு நாள்களாக செய்த சோதனையில் விதிகளை மீறி விற்கப்பட்ட சமையல் பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தோம். இனி தொடர்ந்து ஆய்வு செய்யப்படும்.
இந் நிலையில் வியாழக்கிழமை சோதனையின் போது விற்பனைக்காக கடையில் வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் கவர்களை பறிமுதல் செய்தனர். முன் அறிவிப்பு ஏதுமின்றி பாலித்தீன் கவர்களை பறிமுதல் செய்ததால் வியாபாரிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து வியாபாரிகளை சமரசம் செய்த நகர மன்றத் தலைவர் எம்.பச்சையப்பன். இனிவரும் காலத்தில் உரிய அறிவிப்பு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகரையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள 20 மைக்கிரான்களுக்கு கீழ் உள்ள பாலித்தீன் கவர்களை விற்பனை செய்யாமல் இருக்க வியாபாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக