கடலூர், டிச. 11:
கடலூர் சிப்காட் ஆலையில் இருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்ற ரசாயனக் கழிவு லாரியை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டனர். சிப்காட் தொழிற்பேட்டையில் விலங்குகளின் எலும்பில் இருந்து உரம் மற்றும் கோழித்தீவனம் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து ரசாயான கழிவுகளை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை இரவு புறப்பட்ட லாரி விழுப்புரத்துக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை திண்டிவனத்தைச் சேர்ந்த காஜா ஓட்டிச்சென்றார்.
இந்நிலையில், கடலூர் முதுநகர் பகுதியில் வந்து கொண்டிருந்த இந்த லாரியை சந்தேகத்தின்பேரில் அப் பகுதி பொதுமக்களும், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினரும் மடக்கிப் பிடித்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து லாரி அருகேயுள்ள காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
த கவலறிந்த கோட்டாட்சியர் செல்வராஜ், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சேகர் ஆகியோர் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய பிறகு லாரியை விடுவித்தனர்.
பின்னர் இதுகுறித்து மாசு காட்டுப்பாட்டு வாரிய அலுவலர் சேகர் கூறியது: ரசாயன கழிவுகளை ஏற்றிக்கொண்ட புறப்பட்ட இந்த லாரி முறையாக அனுமதி பெற்று தான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உயிரியல் உரம் தயாரிக்கும் ஆலைக்குச் சென்றுகொண்டிருந்தது. இது விசாரணையில் தெரிய வந்தது.இருப்பினும், கடந்த சில மாதங்களாக இந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட ஆலைக்கு தான் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக