சிதம்பரம், டிச. 11:
இந்தியாவில் உணவு சரியாக பதப்படுத்தப்படாததால் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுகிறது என அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புலத்தில் வேளாண் பொருளாதாரத் துறையும், புதுதில்லி மத்திய உயிர் தொழில்நுட்பத் துறையும் இணைந்து நடத்தும் மிகவும் பின் தங்கிய தாழ்த்தப்பட்ட மகளிருக்கான 5 நாள் உணவு பதப்படுத்துதல் குறித்த தொழில் முனைவோர் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. பயிற்சியில் சுமார் 100 பெண்கள் பங்கேற்றனர். துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: உணவு சரியாக பதப்படுத்தப்படாததால் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுகிறது. இந்த இழப்பீட்டை தவிர்க்க இதுபோன்ற பயற்சி மிகவும் அவசியமானதாகும். மிகவும் பின் தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் இந்த பயிற்சி அளிப்பது மிகவும் வரப்பிரசாதமாகும் என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார். வேளாண்புல முதல்வர் பி.நாராயணசாமி தலைமை வகித்தார். வேளாண் பொருளாதாரத் துறைத் தலைவர் கே.ஆர்.சுந்தரவரதராஜன் வரவேற்றார். இந்தியன் ஒவர்ஸீஸ் வங்கி முதுநிலை மண்டல மேளாளர் பி.பாஸ்கர் சிறப்புரையாற்றினார். தொழில் முனைவோர் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று தொழிலதிபரான விருதுநகர் ராஜ்குமார் தனது அனுபவங்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியை விரிவுரையாளர் சீனுவாசன் தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர் ஆர்.ரங்கராஜூலு நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக