உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

கடலூர் - பரங்கிப்பேட்டை கடற்கரை சாலை பணி முடங்கியது : 750 மீ., தூர நிலத்தால் 3 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

கடலூர் : 

                   கடலூர் - பரங்கிப்பேட்டை சாலையில் தனியாரிடம் உள்ள 750 மீட்டர் தூர நிலத்தை அரசு கையகப்படுத்தி கொடுத்தால் பணி முடிவடைந்து 50 கிராம மக்கள் பயனடைவார்கள்.

               கடலூர் - பரங்கிப்பேட்டை கடற்கரை சாலையில் பரங்கிப்பேட்டை வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் மீன்பிடி துறைமுகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கடல் வாழ் உயிரின ஆராச்சி மையம் உள்ளன. சாமியார்பேட்டை - வேலங்கிராயன்பேட்டை இடையில் சிறிய துறைமுகமும், கப்பல் புனரமைப்பு தளம், குமாரப் பேட்டை - மடவாப்பள்ளம் இடையே மிகப் பெரிய "ஜவுளி பூங்கா' உள்ளிட்ட நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. 

                  மேலும் அய்யம்பேட்டை முதல் பேட்டோடை, பெரியகுப்பம் வரை நகார்ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. அன்னப் பன்பேட்டை- அய்யம் பேட்டை இடையில் நாகார் ஜூனா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள், தொழிலாளர்கள் குடியிருப்பு அமைக்கப்பட இருக்கிறது. நஞ்சலிங்கம்பேட்டை - தம்மனாம்பேட்டை இடையே 800 ஏக்கரில் இ.ஐ.டி., பாரி உட்பட பல்வேறு நிறுவனங்களும் அமைந்துள்ளது. பல புதிய நிறுவனங்களும் அமைய உள்ளது. இதன் மூலம் இப்பகுதி வருங்காலத்தில் மிகப்பெரிய தொழிற் பேட்டையாக மாறும்.

                   இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் 10 முதல் 20 கி.மீ., தூரம் வரை சுற்றித் தான் கடலூர் - சிதம்பரம் சாலையை அடைய வேண்டும். கடலூர் - பரங்கிப்பேட்டை வரை சாலை அமைக்க வேண்டும் என பொது மக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து கடற் கரை சாலை அமைக்கும் பணி துரிதமாக நடந்தது. இச்சாலையில் சொத்திக்குப்பம் - ராசாபேட்டை இடையே உப்பனாற்றில் 24 கோடி ரூபாயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 

                 மேலும் பரங்கிப்பேட்டை வெள்ளாறின் குறுக்கே 20 கோடி ரூபாயில் பாலம் கட்டும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கிடையே சாலை அமையும் இடத்தில் நிலம் வைத்திருப்போர் நிலங்களை வழங்க தயக்கம் காட்டினர். இதனையடுத்து மாவட்ட அமைச்சர், எம்.பி., மாவட்ட நிர்வாகத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியால் அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன் வந்து நிலங்களை கொடுத்ததால் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.

                 இந்நிலையில் தம்மனாம்பேட்டை - சித்திரைப் பேட்டை இடையே உள்ள இ.ஐ.டி., பாரி நிறுவனத்திற் கும், தனியார் ஒருவருக்கும் சொந்தமான நிலத்தை வழங்காததால் தம்மனாம்பேட்டை - சித்திரைப்பேட்டை வரை 750 மீ., சாலை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. மிகவும் பயனுள்ள திட்டமான இச்சாலையில் கடலூர் - சிதம்பரம் சாலை மூலம் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவதுடன், 50 கிராம மக்கள், தொழில் நிறுவனத்தினர் பயனடைவர். 

                      50 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு பாலம் கட்டப்பட்டு வெறும் 750 மீ., தூர நிலத்தால் சாலை மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. சாலை முழுமையடைந்தால் 50 கிராமத்தினர் பயனடையவர். தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான உபகரணங்களைக் கொண்டு வரவும், கடலூர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் வரும் பொருட்களை வெளியூர்களுக்கு ஏற்றிச் செல்லவும் வசதியாக இருக்கும்.

                     மேலும் ஆண்டு தோறும் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் - சிதம்பரம் சாலை துண்டிக் கப்பட்டு 10 நாட்கள் வரை போக்குவரத்து தடைபடும். இதுபோன்ற காலங்களில் இச்சாலை மாற்று வழியாகவும் அமையும். மேலும் சுற்றுலாத் தலமான பிச்சாவரத்திற்கு கடலூர் உட்பட பல பகுதிகளில் இருந்து எளிதாக சென்று வரலாம். இ.ஐ.டி., பாரி நிறுவனமும் பயனடையும். எதிர் காலத்தில் பல்வேறு புதிய தொழில் நிறுவனங்களும் அமைய வாய்ப்புள்ளது. எனவே அரசு இந்த இடங்களை கையகப்படுத்தி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior