செம்மை நெல் சாகுபடியில் தயாரிக்கப்பட்ட பாய் நாற்றங்கால்.
கடலூர்:
வேளாண் பணிகளில் பசுமை ராணுவம் என்ற புதிய அமைப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டு வருகிறது.இந்தியாவில் வேளாண் பொருள்கள் உற்பத்தி குறைந்து வருகிறது.
கூலியாள் பற்றாக்குறை, உற்பத்திப் பொருள்களுக்கு உரியவிலை கிடைக்காமை, இயற்கை இடர்பாடுகள் போன்றவற்றால், விவசாயத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் கூட அதை விட்டு வெளியேறவும், அதை உபதொழிலாக மேற்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறர்கள்.இந்நிலையில் நவீன வேளாண்மையும், இயந்திர மயமாதலும் இன்றியமையாத் தேவையாகி வருகிறது.
இயந்திரங்களின் அதிகப்படியான விலையும், தொழில்நுட்பமும், விவசாயிகள் இயந்திரங்களைப் பயன்படுத்த தடைக் கற்களாக உள்ளன. இந்நிலையைப் போக்க நவீன தொழில்நுட்பத்துடன் வேளாண் இயந்திரங்களைப் பயன்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்க விவசாயிகளைக் கொண்ட பசுமை ராணுவம் என்ற அமைப்பு தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக உருவாக்கப்பட்டு வருகிறது.நாட்டு மக்களைக் காப்பதற்கு ராணுவம் இருப்பதுபோல், வேளாண்மையைப் பாதுகாக்க பசுமை ராணுவம் தொடங்கப்பட்டு இருக்கிறது.
ராணுவ வீரர்கள் வேறுயாரும் அல்ல, விவசாயிகளேதான். தமிழகத்தில் முதல் முறையாக நாகை மாவட்டத்தில் தொடங்கிய இத்திட்டம் தற்போது கடலூர் மாவட்டத்துக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 6 தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, உழவுக்குப் பயன்படும் ரோட்டாவேட்டர், பவர் டில்லர், மின் டிராக்டர், நாற்று நடவு இயந்திரம், பூச்சிமருந்து தெளிக்கும் இயந்திரம் உள்ளிட்ட வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.ஒரு கூட்டுறவு சங்கத்துக்கு தலா 4 விவசாயிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள்தான் பசுமை ராணுவத்தினர்.
இவர்களுக்கு தனிச் சீருடைகள் வழங்கப்பட்டு, வேளாண் இயந்திரங்களை இயக்குவதற்கு தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.நிலத்தைப் பண்படுத்துதல், செம்மை நெல் சாகுபடி முறையில் நாற்றங்கால் (பாய் நாற்றங்கால், தட்டு நாற்றங்கால், மரச்சட்ட நாற்றங்கால், தெளிப்பு நாற்றங்கால்) தயாரித்தல், நாற்று நடவு செய்தல் போன்றவற்றில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து கீழ மூங்கிலடி கிராமத்தில் களப் பயிற்சியும், கடலூரில் வேளாண் இயந்திரங்களை இயக்குதல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
பயிற்சி பெற்ற பசுமைப் படையினர் தங்களது சேவைப் பகுதிகளில், அழைக்கும் விவசாயிகளுக்கு, இயந்திரங்களுடன் சென்று, நிலத்தைப் பண்படுத்துதல் முதல் நாற்று நடவு வரையிலான வேளாண் பணிகளைச் செய்து கொடுப்பார்கள். இப் பணிகளுக்கான கூலி, ஊக்கத் தொகையாகவும், வாடகையாகவும் வழங்கப்படும். இதில் ஊக்கத் தொகை பசுமைப்படை விவசாயிக்கும், வாடகை கூட்டுறவு சங்கத்துக்கும் கிடைக்கும்.
இப்பயிற்சியை பார்வையிட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளர் இரா.ராஜேந்திரன் கூறுகையில்,
""வேளாண்மையப் பாதுகாக்க விவசாயிகளைக் கொண்ட ராணுவம் அமைக்கப்பட்டு உள்ளது. வேளாண்மையில் உள்ள இடையூறுகளைப் போக்க மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், நவீன வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் எளிதாகப் பயன்படுத்த முடியும், வேளாண் செலவுகள் குறையும்'' என்றார்.
பயிற்சியில் பங்கேற்ற உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
""பசுமை ராணுவம் திட்டம் சிறந்த வேளாண் திட்டமாகத் தெரிகிறது. இயந்திரங்கள் இன்றி, கூலியாள்களை பயன்படுத்தி நிலத்தைப் பண்படுத்துதல், நாற்றங்கால் தயாரித்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஏக்கருக்கு |3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை செலவாகும், ஆனால் பசுமை ராணுவம் திட்டத்தில் ஏக்கருக்கு 1,800தான் செலவாகிறது. வேளாண் பணிகளுக்கு உதவுவதற்காக கூட்டுறவுத் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில், 400 கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் குழுக்களுக்கும் வேளாண் கருவிகளை மானிய விலையில் வழங்கி பயிற்சி அளிக்க வேண்டும்'' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக