உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 26, 2010

கடலூர் முதுநகர் அருகே பாசன வாய்க்காலில் ரசாயன கழிவுநீர்: சாலைமறியல்

கடலூர் : 

                கடலூர் முதுநகர் அருகே தொழிற்சாலை ரசாயனக் கழிவு நீர் பாசன வாய்க்காலில் கலப்பதைக் கண்டித்து சங்கொலிகுப்பம் கிராம மக்கள் நேற்று சிதம்பரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

                கடலூர் முதுநகர் சிப்காட்டில் 50க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற் சாலைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து தான் ஆற்றிலோ, கடலிலோ கலக்க விட வேண்டும். ஆனால் ஒரு சில தொழிற்சாலைகள் இதை முறையாக பின்பற்றுவதில்லை. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையினால் பாசன வாய்க்காலில் ஓடும் தண்ணீரோடு ரசாயன கழிவு நீரும் கலந்துள்ளது. சிப்காட் தொழிற்சாலையை அடுத்துள்ள சங்கொலிக்குப்பம் அருகே ஓடும் பாசன வாய்க்காலில் ரசாயன கழிவு கலந்ததால் அதில் இருந்த மீன்கள் இறந்தது மட்டுமின்றி துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த தண்ணீர் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

                      இதனைக் கண்டித்து சங்கொலிக்குப்பம் கிராம மக்கள் கடலூர்-சிதம்பரம் சாலையில் நேற்று காலை 10.30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த முதுநகர் போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிற் சாலை ரசாயனக் கழிவுகள் கலக்காமல் இருக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 11.30 மணிக்கு மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior