கடலூர்:
நல்ல விலை கிடைக்கும் என்பதால், தமிழ்நாட்டில் எதிர்வரும் பருவத்தில் மக்காச் சோளம் பயிரிடலாம் என்று வேளாண் துறை பரிந்துரை செய்து உள்ளது.
2009-10-ம் ஆண்டு உலக அளவில் மக்காச்சோளத்தின் உற்பத்தி 804 மில்லியன் டன்னாக இருக்கும் என்று, சர்வதேச தானியக் கழகம் கணித்து உள்ளது. கடந்த ஆண்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இது 2 சதவீதம் அதிகம்.இவ்வாண்டு மக்காச் சோளத்தின் தேவை 818 மில்லியன் டன்னாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 44 சதவீதம் அதிகம் ஆகும் .இந்தியாவில் மக்காச் சோளம் சாகுபடி கரீப் பருவத்தில் 27.97 லட்சம் ஹெக்டேராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டைவிட 2.1 சதவீதம் குறைவாகும்.பரப்பளவு குறைவுக்கு, மக்காச்சோளம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பருவ மழை தாமதமானதே காரணம் என்று கூறப்படுகிறது.எனினும் ஆந்திரம் மற்றும் மகாராஷ்டிரத்தில் மக்காச்சோள உற்பத்தி, அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வர்த்தக மையங்கள் எதிர்பார்க்கின்றன. தமிழ்நாட்டில் மக்காச்சோளத்தின் விலை ஜூலை மாதத்தில் குவிண்டால் 1100-ஐ தாண்டி உள்ளது. எனவே ஆடிப்பட்டத்தில் விதைத்து, அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்தைக்கு வரும் மக்காச்சோளத்துக்கு இதே விலை கிடைக்குமா என்று விவசாயிகளிடம் கேள்வி எழுந்துள்ளது.
வர்த்தக மையங்களின் தகவல்களின்படி மக்காச்சோளத்தின் விலை, ஆகஸ்ட் மாத இறுதி வரை, அதாவது கர்நாடக மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் சந்தைக்கு வரும் வரை, இதே போக்கில் இருக்கும் என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது.ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு மக்காச்சோளத்தின் விலை குவிண்டாலுக்கு 1000-த்தில் இருந்து சரிய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் மக்காச்சோளத்தின் விலையை முன்னறிவிப்பு செய்ய ஆய்வு மேற்கொண்டது.
உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலவிய விலை விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. ஆடிப் பட்டத்தில் விதைக்கப்பட்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை சந்தைக்கு வரும் மக்காச் சோளத்தின் விலை குவிண்டாலுக்கு 850 முதல் 950 வரை நிலவும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.தொடர்ந்து கோழித் தீவனத்தின் தேவை மற்றும் கரீப் பருவத்தில் சாகுபடி பரப்பளவு குறைவு போன்ற காரணங்களால், மக்காச்சோளத்தின் விலை ஏறுமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் அறிவித்து உள்ளது.
மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் தமிழக விவசாயிகள் எதிர்வரும் பட்டத்தில், மக்காச்சோளத்தை பயிரிடலாம் என்று, வேளாண்துறை சிபாரிசு செய்து உள்ளது. நல்ல விலை கிடைக்க வேண்டுமானால் பெரிய மணிகள் உள்ள மக்காச்சோள ரகங்களைப் பயிரிடுமாறும், வேண்டுகோள் விடுத்துள்ளது.100 கிராம் மக்காச்சோளக் கதிரில் 350-க்கும் குறைவான மணிகள் இருந்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக