கடலூர் அருகே பாரம்பரிய முறையில் தயாரான நெல் நாற்றுகளை, நிலத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயத் தொழிலாளர்கள்.
கடலூர்:
டெல்டா பாசன விவசாய நிலங்களில் போதுமான தண்ணீர் இருந்தும் சம்பா சாகுபடி பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை.16 லட்சம் ஏக்கர் காவிரி டெல்டா பாசன விவசாயிகள், தங்களது பாரம்பரிய முறைகளையே நம்பியுள்ளனர்.
மேட்டூர் அணை திறந்தால்தான் சேற்றில் கால்வைக்க முடியும் என்ற நிலை பன்னெடுங்காலப் பழக்கம். டெல்டா பாசனப் பகுதிகளில் குறிப்பாகக் கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாக தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து 3 டி.எம்.சி. தண்ணீர் திறந்தால் எந்த அளவுக்கு தண்ணீர் தேங்குமோ, அந்த அளவுக்கு மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 10 தினங்களுக்கு மேலாக இந்த நிலை நீடிக்கிறது. மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது.ஆனால் சம்பா நெல் சாகுபடிப் பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. கோடை உழவும் பெரும்பாலான நிலங்களில் நடைபெறவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.ஆடிப் பட்டம் தேடிவிதை என்பது பழமொழி. இந்த ஆண்டு ஓரளவுக்கு நல்ல மழை பெய்து இருக்கும் நிலையில், பாரம்பரிய விவசாயிகள் ஆடிப்பட்டம் தொடங்கும் ஆகஸ்ட் முதல் வாரத்திலாவது வேளாண் பணிகளைத் தொடங்கி இருக்க வேண்டும்.
ஆனால் தொடங்கவில்லை.இனி மேட்டூர் அணை திறக்கப்பட்டு, மீண்டும் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய பின்னர்தான் வேளாண் பணிகள் தொடங்கப்படும் என்றால், டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா நாற்று நடவுப் பணிகள் அக்டோபர் கடைசியில்தான் முடிவடையும். பிப்ரவரி மாதத்துக்கு மேல்தான் சம்பா அறுவடை. இடையில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கத்தையும் சந்திக்க நேரிடும்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழை திருப்தியாக இருந்தும், சம்பா சாகுபடிப் பணிகள் பிந்திப் போவதும், சம்பாவுக்குப் பின் 10 லட்சம் ஏக்கரில் உளுந்து பயிரிட முடியாமல் போவதும், வேளாண்துறை டெல்டா விவசாயிகளுக்கு முறையான அறிவிப்புகளை வெளியிடாததும், பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப விவசாயத்தை மாற்றிக் கொள்ள, விவசாயிகளைத் தயார் செய்யாததுமே காரணம் என்று, முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
முன்பெல்லாம் சம்பா நெல் என்றால் குறைந்தபட்சம் 6 மாதப் பயிர். இன்று 6 மாத விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைப்பது இல்லை. விவசாயிக்கும் பொறுமை இல்லை. எனவே குறுகியகால நெல் ரகங்களை வந்துவிட்டன. ஆனால் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப அவற்றையாவது காலாகாலத்தில் பயிரிட்டு, நல்ல மகசூலுக்கு வழிவகுக்கப்படுகிறதா என்றால், இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும் எப்போது சம்பா சாகுபடியைத் தொடங்கலாம், எந்தரக நெல்லை விதைக்கலாம், மேட்டூர் அணை நீர் எத்தனை நாளுக்குக் கிடைக்கும் என்ற எந்த அறிவிப்பையும் வேளாண்துறை வெளியிடவில்லை என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 20ல் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்தது. அதன்படி மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. வானிலை ஆய்வுமைய அறிவிப்புக்கு ஏற்ப விவசாயிகளைத் தயார் படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டியது வேளாண் துறையின் பொறுப்பு. ஆனால் அதைச் செய்ய வில்லையே என்கிறார் முன்னோடி விவசாயியும், மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவருமான பி.ரவீந்திரன்.
பன்னாட்டு இயற்கை பேரிடர் மேலாண்மை முகமை என்ற தொண்டு நிறுவனம், வானிலை ஆய்வு மையங்களுடன் இணைந்து, விவசாயிகளுக்கு வானிலை முன்னறிவிப்புகளையும் ஆலோசனைகளையும், 17 நாடுகளில் வழங்கி வருகிறது. இந்த முகமை தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனப்பகுதிகளுக்கு இந்த ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பை அண்மையில் ஏற்றுக் கொண்டு இருப்பதாகவும் ரவீந்திரன் கூறினார். இனியாவது டெல்டா விவசாயத்தில் மாற்றம் ஏற்படுமா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக