உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 07, 2010

"ஆட்டம் காணும்" டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்


 
கடலூர் :
 
            சாதாரண மக்கள் பயணிக்கும் டவுன் பஸ்கள், ஆட்டோக்கள் பெருக்கத்தின் காரணமாக வருவாய் இழந்து தத்தளித்து வருகின்றன. 
 
                எதிர்காலத்தில் டவுன் பஸ்களே காணாது போகும் நிலைக்கு கடலூர் நகரம் தள்ளப்பட்டு வருகிறது.சுமார் 250 கி.மீ. நீளச் சாலைகளைக் கொண்ட கடலூரில், தேசிய நெடுஞ்சாலை தவிர ஏனைய சாலைகள் பலவும், மிகவும் குறுகலானவை. வரைமுறையற்ற ஆக்கிரமிப்புகள், அங்கீகாரம் இல்லா மனைப் பிரிவுகளால் சாலைகளின் அகலம் வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் கடலூருக்கு மாவட்டத் தலைநகர் என்ற அந்தஸ்து குறைந்து வருகிறது. கடலூர் நகராட்சி எல்லைக்குள் 25 தனியார் நகரப் பேருந்துகள், 20 மினி பஸ்கள், இயக்கப்படுகின்றன.
 
                கடலூரில் இருந்து 51 அரசு நகரப் பஸ்கள் இயக்கப்படுகின்றன.  36 ஷேர் ஆட்டோக்கள், 1500 டீசல் ஆட்டோக்கள், 2 ஆயிரம் பெட்ரோல் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.  நகரப் பஸ்கள் அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வழித்தடங்களில், தேசிய நெடுஞ்சாலையிலும் முக்கிய மாநில நெடுஞ்சாலைகளிலும் மட்டும் இயக்கப்படுகின்றன.கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கம், போக்குவரத்து வசதிகளின் தேவையை அதிகரித்து இருக்கிறது. 
 
                 புதிய நகர்களின் வருகைக்கு ஏற்ப கடலூரில் பஸ்கள் மற்றும் சிற்றுந்துகளின் சேவை அதிகரிக்கவில்லை. நகரப் பஸ்களுக்கு புதிய வழித் தடங்களையோ, மக்களின் தேவைக்கு ஏற்ப, வழித்தடத்தில் மாற்றங்களையோ அரசு செய்துகொடுக்கவில்லை.இதனால் பஸ் வசதி இல்லாத பகுதிகளைச் சேர்ந்த மக்கள், ஆட்டோக்களையும், டீசல் ஆட்டோக்களையும், ஷேர் ஆட்டோக்களையும் நம்ப வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். ஷேர் ஆட்டோக்களில் 15 பேரும், டீசல் ஆட்டோக்களில் 10 பேரும், பெட்ரோல் ஆட்டோக்களில் 5 பேரும் பயணிப்பது கடலூரில் மிகச் சாதாரணம். இதனால் விபத்துக்கள் பெருகிவிட்டன. 
 
               போக்குவரத்துப் போலீஸôர் இதைக் கண்டுகொள்வதே இல்லை எனப் பொதுமக்கள் அங்கலாய்க்கிறார்கள். சில சாலைகளை ஒருவழிப்பாதை என அறிவித்து, கடைக்காரர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். மக்கள் வாகனங்களை நிறுத்த வசதி இல்லை.சிறிய நகரமான கடலூரில் அனைத்து வகை ஆட்டோக்களின் பெருக்கம், நகர மக்களைப் பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 1000 புதிய டீசல் ஆட்டோக்களுக்கு கடலூர் வங்கிகள் கடன் வழங்கி இருப்பதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
               ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டும் அவைகள் இயங்குவதில்லை. கட்டண நிர்ணயமும் இல்லை. இதனால் கடலூரில் ஒரு கி.மீ. தூரத்துக்கு ஆட்டோ கட்டணம் ரூ.30.டீசல், பெட்ரோல் விலை உயர்வாலும், ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்கள் பெருக்கத்தாலும், கடலூரில் 25 தனியார் நகரப் பஸ்களும் வருவாய் குறைந்து, விரைவில் நிரந்தரமாக நிறுத்திவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருப்பதாக பஸ் அதிபர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அரசு நகர பஸ்கள் பெரும் நஷ்டத்தில் இயங்குவதாகவும், மாணவர்களின் இலவச பஸ் பாஸ்களுக்காக இயக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கடலூர் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
                  கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1500 டீசல் ஆட்டோக்கள் கடலூரில் வந்துள்ளன.  டீசல் ஆட்டோக்களை கட்டுப்படுத்த 30-9-2007ல் போக்குவரத்துத் துறை ஆணை பிறப்பித்துள்ள போதிலும், அவை விபத்துக்களுக்குக் காரணமாக இருக்கும் நிலையிலும்,  மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கண்டுகொள்ளவில்லை என்றும் ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் சேகர் குற்றம்சாட்டுகிறார்.
 
எங்கு காணினும்...
 
                  கடலூரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இருப்பதால், அவற்றில் பயணம் செய்வோருக்கும், சாலைகளில் செல்வோருக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகிவிட்டது. எங்கும் நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள். காணும் இடமெல்லாம் ஆட்டோ ஸ்டாண்டாக உள்ளது. அவற்றுக்கு நிறுத்தும் இடங்களை நிர்ணயிக்க வேண்டும்.  அரிசிபெரியாங்குப்பம் - கடலூர், செம்மண்டலம்- திருவந்திபுரம், வண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் மினி பஸ்கள் அல்லது, டவுன் பஸ்களை இயக்க வாய்ப்புகள் இருந்தும் இயக்காதது, ஆட்டோக்களின் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திவிட்டது.  நகரப் போக்குவரத்து பிரச்னைகளுக்குத் தீர்வுகாண நீண்ட காலத்துக்குப் பிறகு, கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஏற்பாடு செய்துள்ளார். அதிலாவது நல்ல தீர்வு கிடைக்குமா என்று வினவுகிறார் கடலூர் நகரக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior