உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக 305கோடி செலவிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 10 கோடி அளவுக்கு மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான செலவுக் கணக்கு விவரங்களை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதன் விவரம்:
மாநாட்டுச் செலவுகளுக்காக 73 கோடி அனுமதிக்கப்பட்டது. இந்தத் தொகையில் அரங்குகள் அமைப்பதற்கான செலவுகளுக்காக 13.4 கோடியும், பொது அரங்குகள், பந்தல் அமைத்தல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான செலவு 13.93 கோடியாகும். கண்காட்சி அரங்குகள் மற்றும் அவை தொடர்பாக 6.31 கோடியும், மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட இனியவை நாற்பது பேரணிக்கு 6.30 கோடியும், உணவுக்கான செலவாக 5.7 கோடியும் செலவிடப்பட்டன.
போக்குவரத்துச் செலவாக 7 கோடியும், சிறப்பு மலர் தயாரிப்புப் பணிகளுக்காக 88 லட்சமும், இணையதள மாநாடு மற்றும் இணையதளக் கண்காட்சி தொடர்பான பணிகளுக்காக 2.3 கோடியும் செலவிடப்பட்டன. முக்கிய பிரமுகர்களை வரவேற்றல் மற்றும் மக்கள் தொடர்பு விளம்பரப் பணிகளுக்காக 11 கோடியும் செலவிடப்பட்டது.ஆக மொத்தம் அனுமதிக்கப்பட்ட 73 கோடியில் ரூ. 69 கோடி செலவிடப்பட்டது. ரூ.4 கோடி மீதப்பட்டுள்ளது. இதேபோன்று, கோவை மாநகரப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புப் பணிகளுக்காக 239 கோடியே 26 லட்சம் அனுமதிக்கப்பட்டது. அதில், 232 கோடியே 76 லட்சம் செலவிடப்பட்டு, 6 கோடி மீதப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக