நெய்வேலி:
நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பம் மற்றும் பெயர்ப் பலகையை மர்ம நபர்கள் புதன்கிழமை சேதப்படுத்தியுள்ளனர். இதற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.வனிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெய்வேலியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தில் காமராஜர் பிறந்தநாளை கொண்டாட அப்பகுதி காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரியை அழைத்து அப்பகுதியில் காங்கிரஸ் கொடியேற்றம் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் புதன்கிழமை இரவு காங்கிரஸ் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி, அங்கிருந்த பெயர்ப் பலகையை உடைத்து அருகிலுள்ள ஏரியில் தூக்கி வீசி எறிந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி.வனிதா, பண்ருட்டி வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் டி.வனிதா புகார் செய்து, சேதப்படுத்திய மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். காவல்துறை பாரபட்சமாக நடந்துகொண்டால் நெய்வேலி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக