கடலூர்:
தமிழக அரசின் தெளிவான அறிவிப்பு இல்லாத காரணத்தினால், பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களாகியும் தனியார் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கல்வியில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் பொருட்டு சமச்சீர் கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. முதல் கட்டமாக ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தப் புத்தகங்களை தமிழக பாடநூல் கழகமே அச்சிட்டு வழங்கும் என கூறப்பட்டது. அதிக எண்ணிக்கையிலான புத்தகங்கள் அச்சடிக்க வேண்டியிருந்தால், சமச்சீர் பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது. அரசு அச்சிட்ட புத்தகங்களை பாடநூல் கழகம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தக திட்டத்திற்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்களை தமிழக பாடநூல் கழகத்திடமோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
தனியார் நிறுவனங்கள், தனியார் பள்ளிகளை நேரடியாக தொடர்பு கொண்டு "ஆர்டர்கள்' பெற்றன. பின், சமச்சீர் பாட புத்தகங்களை அச்சடிக்க முன்வந்த தனியார் நிறுவனங்கள் சில, விலை கட்டுபடியாகவில்லை என்பதால் அச்சடிப்பதை நிறுத்திக் கொண்டன. இதை அறியாத தனியார் பள்ளி நிறுவனங்கள், தனியார் நிறுவனத்தில் சமச்சீர் பாடப் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் என இருந்தன. பள்ளி திறந்து ஒரு மாதமாகியும் அந்நிறுவனங்களில் இருந்து புத்தகம் வராததைத் தொடர்ந்து தனியார் பள்ளி நிறுவனங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகத்தை அணுகிய பிறகே விவரம் தெரிந்தது.
அதன் பிறகே தனியார் பள்ளிகளுக்குத் தேவையான சமச்சீர் பாடப் புத்தகங்களை தமிழக பாட நூல் கழகமே அச்சிட்டு வழங்க முன்வந்துள்ளது. இதன் காரணமாக, பள்ளி துவங்கி இரண்டு மாதமாகியும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல தனியார் பள்ளிகளில் இன்னமும் சமச்சீர் பாடப் புத்தகம் இல்லாமல் புத்தகத்தை, "ஜெராக்ஸ்' எடுத்து பாடம் நடத்தி வருகின்றனர். சில தனியார் பள்ளி நிர்வாகங்கள், மாணவர்களையே பாடப் புத்தகங்களை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன.
கடந்த காலங்களில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களை அரசே இலவசமாக வழங்கி விடுவதாலும், தனியார் பள்ளி நிறுவனங்கள் மொத்தமாக புத்தகங்களை கொள்முதல் செய்து அவர்களே மாணவர்களுக்கு வழங்கி விடுவதாலும் தனியார் புத்தகக் கடைகளில் பாடப்புத்தகங்கள் விற்கப்படுவதில்லை. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள், சமச்சீர் பாடப் புத்தகங்கள் கிடைக்காமல் "ஜெராக்ஸ்' எடுத்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக