நெய்வேலி:
அரசு மருத்துவமனைகளில் ரூ. 600 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு அவற்றின் உதவியுடன் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
வடலூரில் இயங்கிவரும் அஞ்சலை தனியார் மருத்துவமனையின் வெள்ளிவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அம்மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சின்னதுரை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது:
தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க பல பத்திரிக்கைகள் உள்ளன. தமிழக முதல்வர் பத்திரிக்கைகளுக்கு எந்த அளவுக்கு மதிப்பளிக்கிறார் என்பது பத்திரிக்கையாளர்களுக்குத் தெரியும். முதல்வர் கருணாநிதி அதிகாலையில் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் அரசின் குறைபாடு குறித்து செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்து, உடனேயே சம்மந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தகவல் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். இருப்பினும் சில பத்திரிக்கைகள் சாதாரணமான காய்ச்சலைக் கூட மர்மக் காய்ச்சல், மக்கள் பீதி என எழுதுகின்றனர். இதனால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது என தெரியவில்லை. குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.
அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கிறோம். இந்த அரசு பொறுப்பேற்ற பின் மருத்துவம் சார்ந்த 31 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 6677 மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்கின்ற நிலை அரசு மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் 24 மணி நேரம் என்று போர்டு மட்டும் வைத்துவிட்டு, இரவில் டாக்டர் இருப்பது கிடையாது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள ஒரே மாநிலம் தமிழகம் தான்.
இதன்மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரம் மருத்துவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ரூ. 600 கோடிக்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டு, அவை பொதுமக்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக இன்று அனைத்து அரசு மருத்துவமனைகளும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். விழாவில் திருவங்காடு டாக்டர் ராஜகீர்த்தி, ஒபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.செல்வராஜ், டாக்டர் ஆர்.கோவிந்தசாமி, குறிஞ்சிப்பாடி ஒன்றியக் கல்விக்குழு உறுப்பினர் சிவக்குமார். காங்கிரஸ் மாவட்டச் செயலர் அன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக