சுமை தாங்கி கல்லை அபகரிக்க திட்டம்: நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?
நிலத்தில் நடப்பட்ட நிலையில் உள்ள சுமை தாங்கி கல்.
பண்ருட்டி:
பண்ருட்டி-கடலூர் சாலையில் உள்ள சுமை தாங்கி கல் சிதைக்கப்பட்டு தனிநபர்கள் அபகரித்துச் செல்ல முயற்சித்துள்ளனர். இந்த கல்லை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்ருட்டி-கடலூர் நெடுஞ்சாலையில் (ஒன்றிய அலுவலகத்துக்கு அருகே) கிறிஸ்தவ தேவாலயத்துக்கு எதிரே சாலை ஓரம் சுமை தாங்கி கல் உள்ளது. பல ஆண்டு காலமாக இருந்து வந்த இந்தக் கல்லை அபகரிக்க சிலர் திட்டமிட்டு சிதைத்துள்ளனர். சிதைக்கப்பட்ட சுமை தாங்கி கல்லின் மேல் பகுதி அருகே உள்ள ஒரு வீட்டின் வாசல் முன் படிக்கட்டாக போடப்பட்டுள்ளது. மேலும் நிலத்தில் நடப்பட்டிருந்த இரு கல்லில் ஒன்றை பள்ளம் பறித்து அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். அந்த கல்லில் "தேவகோட்டையில் நாட்டுக்கோட்டை ப.ள.அ.வேங்கடாசல செட்டியார் தர்மம்' என எழுதப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து வளர்ச்சி அடைவதற்கு முன்னர் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருள்களை தலைச் சுமையாக கொண்டு செல்வர், சுமை மிகுந்த பொதிகளை இறக்கி ஏற்ற வசதியாக சாலையின் ஓரத்தில் அங்காங்கே சுமை தாங்கி கல் அமைக்கப்பட்டிருக்கும்.பண்ருட்டி-கடலூர் சாலையில் செல்பவர்களுக்கு நீண்ட நாள்களாக காட்சி பொருளாகவும், நினைவுச் சின்னமாகவும் இருந்த இந்த கல்லை அபகரிக்கும் நோக்கில் யாரோ சிதைத்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் உள்ள இந்தக் கல்லை அகற்ற தனி நபர்களுக்கு அனுமதி அளித்தது யார்? இதைப் பாதுகாக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்த சுமைதாங்கி கல்லை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக