வண்ணமீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் தொடக்க விழாவில் குத்துவிளக்கேற்றுகிறார் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் (இடமிருந்து 3வது).
சிதம்பரம்:
அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் துறையுடன் இணைந்து தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் நல்ல நீரில் கடல் வண்ண மீன்கள் வளர்ப்பது குறித்து புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு கால்நடை, பால் மற்றும் மீன்வளத்துறை சிறப்புச் செயலர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கடல் வண்ணமீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்த 5 நாள் பயிற்சி முகாம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.விழாவில் தமிழக கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: நல்ல நீரில் கடல் வண்ணமீன் வளர்ப்பது மிக சிரமமான காரியமாக இருந்தது. ஆனால் அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் நல்ல நீரில் வண்ண மீன்களை வளர்ப்பது குறித்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து வெற்றி கண்டுள்ளது பெருமைக்குரியது.
இதுவரை தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் அரசு உதவியுடன் பல்வேறு திட்டப் பணிகள் மூலம் நல்ல நீரில் உணவுக்கான மீன் உற்பத்தி செய்து வருகின்றனர். தற்போது கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு கடல் வண்ணமீன் உற்பத்தி செய்வது குறித்த திட்டப் பணிகளை தமிழக மீன்வளத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தும் என கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.
விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகித்துப் பேசுகையில்,
"இதுவரை கடல் வண்ணமீன் வளர்ப்பு குறித்து பயனாளிகளுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அரசு மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது பெருமைக்குரியது' என்றார்.
மத்திய அரசு கடலோர மீன் வளர்ப்பு ஆணைய செயலாளர் ஆர்.பால்ராஜ் வாழ்த்துரையாற்றுகையில்,
"கடல் வண்ண மீன்களை உற்பத்தி செய்து பாக்கெட்டில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பத்தை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்றார்.விழாவில் கடல்வாழ் அறிவியல் புல முதல்வர் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். ஈஸ்வர்தேவ் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பயிற்சி முகாம் செயலாளர் முனைவர் டி.டி.அஜீத்குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முனைவர் எஸ்.குமரேசன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக