உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 20, 2010

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னை கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு


சிதம்பரத்தை அடுத்த அம்மாப்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பந்த்தின் போது கண்ணாடிகள் உடைக்கப்பட்ட அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்.

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழைப்பின்பேரில் செவ்வாய்க்கிழமை நடந்த முழு அடைப்பில் சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வடலூர் நீங்கலாக, கடலூர் உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

                    13 ஆயிரம் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநிரந்தரம், சமவேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளுக்காக, செப்டம்பர் 19-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்த போராட்டமாக இருந்தது, தொ.மு.ச. தனியாக ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டதைத் தொடர்ந்து, தொழிற்சங்கங்களுக்கு இடையே பிளவு ஏற்பட்டது. பின்னர் அதுவே எதிர்க்கட்சிகளின் போராட்டமாக மாறிவிட்டது. எனவே அதிமுக, பாமக, இரு கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை, கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து இருந்தன.

                   முழு அடைப்பு நியாயம் அல்ல என்று மாவட்ட நிர்வாகமும், சட்டவிரோதமானது என்று காவல் துறையும் அறிவித்தன. தொழிலாளர்கள் பிரச்னையை அரசியல் ஆக்கி ஆதாயம் தேடுகிறார்கள் எதிர்க்கட்சிகள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். அரசு ஊழியர் சங்கங்கள் பந்த் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டனர்.இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பெரும்பாலான ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிதம்பரத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 

                      குறிஞ்சிப்பாடி மற்றும் வடலூரில் கடைகள் திறந்து இருந்தன.கடலூரில் காலை 6 மணிக்கு மேல் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. கடலூரில் சினிமா தியேட்டர்களில் காலை, மதியம் காட்சிகள் நடைபெறவில்லை. ஹோட்டல்கள் மூடப்பட்டு இருந்தன. நகைக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.பெரும்பாலான ஆட்டோக்கள், டாக்ஸிகள், லாரிகள் ஓடவில்லை. 

                 வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது. கடலூரில் காய்கறி மார்க்கெட்டுகள் இயங்கவில்லை. காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. ரமேஷ் குடவாலா தலைமையில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. மாசானமுத்து தலைமையில் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உள்ளிட்ட 6 மாவட்ட எஸ்.பி.க்கள், சுமார் 3 ஆயிரம் போலீசார்  பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகள், முக்கிய இடங்களில் போலீசார்  குவிக்கப்பட்டு இருந்தனர். வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

                    கடலூரில் ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த போலீஸôர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 5 தனியார் பஸ்களும் 5 அரசு பஸ்களும் கல்வீச்சில் சேதம் அடைந்தன. ஆனால் இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் செய்யப்படவில்லை என்று  போலீ சார் தெரிவித்தனர். கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 19 பேரை பிடித்துவைத்து விசாரணை செய்துவருவதாகவும் போலீசார்  தெரிவித்தனர். 

சிதம்பரம்:

                சிதம்பரம் வழியாகச் செல்லும் பஸ்கள், கார்களை வல்லம்படுகை செக்போஸ்ட்டில் போலீசார்  நிறுத்தி வைத்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஒன்றாகச் சேர்த்து போலீசார்  பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். 

நெய்வேலி:

                      நெய்வேலியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் காய்கறி சந்தை நடைபெறவில்லை. என்.எல்.சி. ஊழியர்கள் முழு அடைப்பில் பங்கேற்கவில்லை. 

பண்ருட்டி:

                பண்ருட்டியில் புதுப்பேட்டை பகுதியில் கடைகளை அடைக்கக்கோரிய தொரப்பாடி அதிமுக பேரூர் செயலர் கனகராஜ், பாமக நகர செயலர் குமார், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கநாதன், தேமுதிக நகர செயலர் முருகன் உள்ளிட்ட 14 பேரை போலீசார்  கைது செய்தனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

விருத்தாசலம்:

                      விருத்தாசலத்தில் கடைகளை மூடச் சொல்லி எதிர்க்கட்சியினரும், திறக்கச் சொல்லித் திமுகவினரும் கோரியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior