கடலூர்:
மாணவிகளைக் கேலி செய்ததால் கடலூர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. பயங்கர ஆயுதங்களுடன் திரண்ட அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் அருகே உள்ள மீனவர் கிராமங்கள் சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை. ராசாப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் பஸ்சிர்குக்குக் காத்து இருக்கும் அவ்வூர் மாணவிகளை, சொத்திக்குப்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நாள்தோறும் கிண்டல் செய்து வந்தனராம். இதுகுறித்து மாணவிகள் புகார் செய்ததைத் தொடர்ந்து, கிண்டல் செய்யும் இளைஞர்களைக் கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்டனர். எனவே ராசாப்பேட்டை இளைஞர்கள் சிலர் பஸ் நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.
மாணவிகளின் புகாருக்கு உள்ளான சொத்திக்குப்பத்தைச் சேர்ந்த கந்தன் (21) என்பவரை அவர்கள் பிடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு கிராமங்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. சொத்திக்குப்பத்தை சேர்ந்த சிலர் ராசாப்பேட்டைக்கு வந்து கந்தனை விடுவித்துச் சென்றனராம். இதற்கிடையே சொத்திக்குப்பத்தைச் சேர்ந்தவர்களை, ராசாப்பேட்டை கிராமத்தினர் சிறைபிடித்துச் சென்றுவிட்டதாக வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் சண்டைக்குத் தயாரானார்கள். ஒருவர் மீது ஒருவர் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதற்குள் கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் கடலூர் முதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மோதல் தவிர்க்கப்பட்டது. எனினும் இரு கிராமங்களிலும் பதற்றம் நீடிக்கிறது. இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.÷இந்தச் சம்பவம் காரணமாக ராசாப்பேட்டையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 30 பேர் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்குச் செல்லவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக