உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், அக்டோபர் 11, 2010

மதுரை காமராஜ் பல்கலையில் ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சி படிப்பு: இந்தியாவில் முதன்முறையாக துவக்கம்

              


                 இந்திய பல்கலையில் முதன்முதலாக, மதுரை காமராஜ் பல்கலையில் ஒருங்கிணைந்த ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சிப் படிப்பு துவக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் கற்பககுமாரவேல் தெரிவித்துள்ளார். மதுரை காமராஜ் பல்கலையில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி.,) அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது.

                   கடந்த சில மாதங்களுக்கு முன், பல்கலை துணைவேந்தர் மற்றும் உயிரியல் துறை மூத்த பேராசிரியர்கள் இந்த ஆலோசனையை, மத்திய அரசின் உயிர்தொழில் நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் முதன்மை குழுவிடம் தெரிவித்தனர். மதுரை காமராஜ் பல்கலையின் வசதியை கருத்தில் கொண்டு, ஜீனோமிக்ஸ் ஆராய்ச்சிப் படிப்புக்கு அரசு 12 கோடி ரூபாயை வழங்கியது. இத்திட்டத்தை பேராசிரியர் குணசேகரன் ஒருங்கிணைத்து நிர்வகிப்பார். இளநிலை (பி.எஸ்சி.,) படிப்பில் உயிரியல் சார்ந்த படிப்பை முடித்தவர்கள், முதுகலை படிப்பும் (எம்.எஸ்சி., ஜீனோமிக்ஸ் மற்றும் ஆராய்ச்சி படிப்பு) ஒருங்கிணைத்து மேற்கொள்ளலாம். 

                 இதற்கான முறையான அறிவிப்பு வரும் டிசம்பரில் வெளியாகும். இப்படிப்பிற்கு பல்கலை சார்பில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி 24 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். இப்படிப்பில் சேர்ந்த இரு ஆண்டுகள் கழித்து, மேற்படிப்பு அல்லது வேறு கல்வி நிறுவனங்களுக்கு அல்லது வேலைக்கு செல்ல விரும்பினால், அவர்கள் பல்கலையின் எம்.எஸ்சி., பட்டத்துடன் செல்லலாம். தரத்தில் முதலான 15 மாணவர்கள் 14 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் பிஎச்.டி., படிக்க அனுமதிக்கப்படுவர். 

                     இக்கல்வி முறை வாயிலாக இளநிலை மாணவர்கள் ஐந்தாண்டுக்குள் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் பட்டங்களை பெறலாம். இத்திட்டத்தின் மறுபகுதியாக மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப துறையில் ஜீனோமிக்ஸ் யுக்திகளை கையாண்டு, நவீன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆராய்ச்சியின் மூலம் பலவகை நோய்களுக்கு புதிய மருந்துகள், நோயை முன்னதாக அறிந்து கொள்ளும் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்படும். இந்த ஆராய்ச்சிக்காக பல்கலை உயிரியல் துறையில் நவீன ஆய்வு வசதிகளை உருவாக்க, மத்திய அரசு ஐந்து கோடி ரூபாய் வழங்கியுள்ளது, என துணைவேந்தர் கற்பககுமாரவேல் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior