ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் சேவை, வரும் நவம்பரில் மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த முறை மூலம் தமிழகத்தின் எந்தவொரு பகுதியில் இருந்தும், ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.
தமிழ்நாடு வாரியத்தின் குறைந்த அழுத்த மின்சார நுகர்வோர்கள் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் முறை 2008-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னையில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, அண்மையில் கோவைக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. இப்போது மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்தச் சேவையை விரிவுப்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதற்கான இணையதள இணைப்பு பணிகளை, மின்சார வாரியம் செய்து வருகிறது.
சென்னை, கோவையில் சுமார் 70 ஆயிரம் மின்சார நுகர்வோர்கள் தங்களின் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி வருகின்றனர். இதில் கோவையில் மட்டும் சுமார் 9 ஆயிரம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தி வருவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் மின் கட்டணம் செலுத்தும் முறை விரிவாக்கம் குறித்து, தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தில் சுமார் 2.20 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர்கள் உள்ளனர்.
இதில் 46 லட்சத்துக்கும் அதிகமான மின் நுகர்வோர்கள் சென்னையில் உள்ளனர். தமிழகத்தின் இதர மாவட்டங்களுக்கும் ஆன்லைன் சேவையை விரிவுப்படுத்தும் அதே சமயத்தில், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி கட்டணத்தைச் செலுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. அஞ்சல் நிலையங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்தச் சேவையைப் பெறலாம். இதற்கு சேவைக் கட்டணமாக ரூ.5 செலுத்த வேண்டும். இதில் சுமார் 200 பேர் வரைதான் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
வரவேற்பு இல்லாத ஆன்லைன் சேவை:
ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை இப்போது குறைவாக உள்ளது. அதாவது ஐசிஐசிஐ, கனரா வங்கி, ஆக்சிஸ், இந்தியன் வங்கி என குறிப்பிட்ட வங்கிகளின் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலமே இப்போது கட்டணத்தைச் செலுத்த முடிகிறது. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. எந்த வங்கியின் கீழ் ஆன்லைன் சேவையில் கட்டணம் செலுத்த முடியும் என்பது குறித்த விவரங்கள், மின் நுகர்வோருக்கு தெரியாமல் உள்ளது.
இதனால், ஆன்லைன் சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஆன்லைன் சேவை எதிர்பார்த்த அளவுக்கு மின் நுகர்வோரிடையை வரவேற்பைப் பெறவில்லை என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,
""பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பிற வங்கிகளையும், ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்தும் திட்டத்தில் இணைக்க பேச்சு நடத்தி வருகிறோம். இப்படி பல வங்கிகளை அனுமதிக்கும்போது, ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இப்போது சென்னையில் 30 நாள்கள் கணக்கீடு மற்றும் பணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. இந்தச் சேவையில் கணக்கீடு நாளில் இருந்து, 20 நாள்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தச் சேவை நவம்பரில் கோவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது'' என்று அவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக