சிதம்பரம்:
சிதம்பரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பன்றிக்காய்ச்சலா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
சிதம்பரம் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அதிகம் பேர் மர்மக் காய்ச்சலால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு 100க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் மர்மக் காய்ச்சல் சிகிச்சைக்காக புற நோயாளிகளாக வந்து செல்கின்றனர். மேலும் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இல்லை என அங்குள்ள டாக்டர்கள் தெரிவிப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் |600க்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. வசதி படைத்தவர்கள் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோய் விழிப்புணர்வு குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து ஆலோசனைக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக