நெய்வேலி:
என்எல்சி விரிவாக்கப் பணிகளுக்கு வீடு நிலம் வழங்கிய உரிமதாரர்களுக்கு ரூ. 6 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை, லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்றம் மூலம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக, நிறுவனம், நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. அவ்வாறு கையகப்படுத்தும் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை லோக்அதாலத் மூலம் வழங்கி வருகிறது. அதன்படி நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான், உய்யக்கொண்டராவி, மணகதி மற்றும் கம்மாபுரம் பகுதியில் நிலம் வழங்கிய 255 நில உரிமதாரர்களுக்கு ரூ. 6 கோடி மதிப்பில் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி என்எல்சி பயிற்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நெய்வேலி சார்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவிபாஸ்கர், மாவட்ட நீதிபதி ஏ.எஸ்.ராஜா, என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி மற்றும் சுரங்க இயக்குநர் பி.சுரேந்திரமோகன் உள்ளிட்டோர் இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தனர்.இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்எல்சி நில எடுப்புத் துறை பொது மேலாளர் என்.எஸ்.ராமலிங்கம், வீரசிகாமணி, முருகேசன், கண்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக