உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 25, 2010

தமிழக சட்டப் பேரவைக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ல் வெளியீடு

             தமிழக சட்டப் பேரவைக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படுகிறது. பெயர் சேர்ப்புக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான காரணம் தனித்தனியே தெரிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

              சட்டப் பேரவைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் திருத்தங்கள் செய்வதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 13-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  விண்ணப்பங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதன்பின், கள விசாரணைக்காக வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்கள் கொடுக்கப்படும்.   படிவங்களில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிகளுக்குச் சென்று வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வர். இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது, விண்ணப்பங்களை அளித்த மக்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

இணையதளத்தில் தகவல்: 

              வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் இருந்தோ அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் இருந்தோ (வருவாய்க் கோட்டாட்சியர்கள், மாநகராட்சிப் பகுதிகளில் மண்டல அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள்) அறிந்து கொள்ளலாம்.  இந்த விவரங்களை http://elections.tn.gov.in  அல்லது http://ceotamilnadu.nic.in என்ற இணையதளங்களிலும் காணலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை முகவர்களும் இந்த நடவடிக்கைளின் போது வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவலாம்

ஜனவரி 5-ல் வெளியீடு: 

                சரிபார்ப்புப் பணிகள் முடிவுற்ற பின்னர், ஒவ்வொரு விண்ணப்பத்தின் மீதான இறுதி உத்தரவுகள் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்படும். இதன்பின், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 

              இந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பின், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது அளிக்கப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பத்தின் நிலை குறித்தும் அந்தந்த விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெயர் சேர்க்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தபால் மூலம் தெரிவிக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior