திட்டக்குடி :
திட்டக்குடி அருகே அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதுமின்றியும் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.
அடுத்த பெருமுளை ஊராட்சியில் வ.உ.சி. அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி கடந்த 1954 முதல், கூரை கொட்டகையில் இயங்கி வந்தது. இப்பள்ளியை அதே கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான ராமசாமி நிர்வகித்து வந்தார். இங்கு பெருமுளை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கூரை கொட்டகையில் இயங்கி வந்த தொடக்கப்பள்ளி, கும்பகோணம் தீ விபத்து எதிரொலிக்குப்பின் ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய நல கூடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது இக்கட்டடத்தில் மின் இணைப்பு, குடிநீர், கழிப்பிடம், சமையலறை என எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இப்பள்ளி மாணவர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., சார்பில் வழங்கப்பட்ட கல்வி உபகரணங்கள் அனைத்தும் மின்வசதியின்றி பாழாகி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கலெக்டர் சீத்தாராமன் இப்பள்ளியை ஆய்வு செய்தார். அப்போது அடிப்படை வசதிகளை விரைந்து சீரமைக்கவும், பழுதான நிலையிலுள்ள சமையலறையை புதுப்பித்து பாதுகாப்பாக உணவு தயாரிக்க வேண்டுமென ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் எச்சரித்தார்.
ஆனால் இது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவு தயாரிக்கப்படும் இடம், தொற்று நோய்களின் பிறப்பிடமான மகளிர் சமுதாய நலக்கூட வாசலில் தான் நடக்கிறது.
இதுபற்றி அப்பள்ளியை நிர்வகித்து வரும் ராமசாமி கூறுகையில்,
"கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டுமென கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு கல்வித்துறையிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை. பெருமுளையை சேர்ந்த தனிநபர் ஒருவர், அரசே பள்ளியை ஏற்று நடத்த வேண்டுமென கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கல்வித்துறை பள்ளியை நடத்தவும், ஆறு மாத காலத்திற்குள் கட்டடத்தை முழுமையாக கட்டி முடிக்க உத்தரவிட்டு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது' என்றார்.
கிராமப்புற ஏழை மாணவர்களின் நலன் கருதி முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் விரும்பும் பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு, கல்வித்தொகை முழுமையாக இலவசம், லேப்- டாப், இலவச சைக்கிள், பஸ் பாஸ் என பல்வேறு சலுகைகளும், எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம் செயல் வழிக்கற்றல் உள்ளிட்ட பல்வேறு பாடத் திட்டங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.
ஆனால் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பயின்று வரும் மாணவர்கள் குறித்து கிராம மக்கள், பெற்றோர்கள் தரப்பிலிருந்து பலமுறை புகார் தெரிவித்தும் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது பள்ளி இயங்கி வரும் சமுதாய நலக்கூடமும் பழுதான நிலையில் உள்ளதால் மாணவ, மாணவிகளின் கல்வி கேள்விக் குறியாகவே உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக