பெரியப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் குழாய் நீர்ப்பாசனமுறை. (உள்படம்) இம்முறையை செயல்படுத்தி வெற்றி கண்ட ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ரங்கராமானுஜம்
சிதம்பரம்:
தோட்டக்கலை பயிர்கள் அருகில் பிளாஸ்டிக் குழாய்களை சொருகி, அதில் நீர் ஊற்றி செய்யப்படும் புதிய பாசனமுறை, சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:
மழை இல்லாத காலங்களில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க மண் பானை வாயிலான நீர்ப் பாசனம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முறையில் நடைமுறைப் பிரச்சனைகள் காணப்பட்டன. இந்நிலையில் தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை பிரிவு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரங்கராமானுஜம், பெரியப்பட்டு கிராமத்தில் இந்த புதிய நீர்ப்பாசன முறையை தனது ரங்கா உயர் தொழில்நுட்ப பண்ணையில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளார்.
இந்த புதிய நீர்ப் பாசன முறையில் பானைகளுக்கு பதிலாக நீண்ட பிளாஸ்டிக் குழாய்கள் (குழாய்களின் அடியில் சிறிதாக பல ஓட்டைகள் போடப்பட்டுள்ளன) தோட்டக்கலை பயிர்களுக்கு அருகில் புதைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புதைக்கப்படும் குழாய்களில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. சிறிய ஓட்டைகள் வாயிலாக தண்ணீர் மெதுவாக தோட்டக்கலை பயிர்களின் வேர்ப் பகுதிக்கு சென்று சேர்வதால் மரங்கள் கடுமையான இயற்கை சீற்றங்களையும் தாண்டி வளர முடிகிறது.
அதிகளவு மழை பெய்யும் சமயத்தில் ஒருவரே எளிதாக இந்த பிளாஸ்டிக் குழாய்களை தங்களின் கைகளால் வெளியே எடுத்து விடலாம். இந்த பாசன முறையில் அதிகளவு வேளாண் தொழிலாளர்கள் தேவையில்லை. பிளாஸ்டிக் குழாய்கள் எளிதாக உடைந்து விடாது. எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை கடுமையான வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் மீண்டும் பொருத்தலாம்.பிற பயன்கள்: பழைய பிளாஸ்டிக் குழாய்கள், உடைந்த குழாய்கள் ஆகியவற்றை குறைந்த விலையில் பெற்று நீர்ப்பாசன முறையை நடைமுறைப்படுத்தலாம்.
பிளாஸ்டிக் வாயிலாக ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்த்து அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தலாம். குறைந்த செலவில் சிறந்த பாசன முறை வாயிலாக இயற்கை சீற்றங்களில் இருந்து நீண்டகால தோட்டக்கலை மரங்களை பாதுகாக்கவும், மகசூலைப் பெருக்கவும் முடியும். எனவே தமிழக விவசாயிகள் தங்களது தோட்டக்கலை பயிர்களுக்கு இப் புதிய நீர்ப் பாசன முறையை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என்றார் ராஜ்பிரவீன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக