சிதம்பரம் :
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் முதுகலை இயற்பியல் படித்த பழைய மாணவர்கள், 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், முதுகலை இயற்பியல் பாடப்பிரிவில் 1984 - 86ம் ஆண்டு 73 பேர் படித்துள்ளனர். அவர்கள் தற்போது விஞ்ஞானிகளாக, கம்ப்யூட்டர் துறை வல்லுனர்களாக, பேராசிரியர்களாக, பல்வேறு துறைகளில் உயர் பதவிகள், பள்ளி ஆசிரியர்களாக, தொழிலதிபர்களாக உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன் படித்து, அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என வசித்து வரும் அவர்கள் அனைவரும் ஒன்றாக சந்திக்க முடிவு செய்தனர்.
சென்னையில் பட்டதாரி ஆசிரியராக பணி செய்யும் கோபி ஆனந்தன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இயற்பியல் துறை பேராசிரியர் ராமசாமி ஆகியோர் அதற்கான முயற்சியில் இறங்கினர். ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு தங்களின் விருப்பங்களைத் தெரிவிக்க அனைவரும் சந்திக்க முடிவு செய்து, நேற்று அவர்கள் படித்த அண்ணாமலை பல்கலை இயற்பியல் துறை வளாகத்தில் சந்தித்துக் கொண்டனர்.
சந்திப்பு நிகழ்ச்சியில், அமெரிக்காவில் இன்ஜினியர் தனசேகரன், மத்திய அரசின் தொழில் முனைவோர் அமைப்பு உதவி பொது மேலாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பெங்களூரு விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி முருகன், தேசிய தகவல் தொடர்பு துறை அதிகாரி வெங்கட்ட ரமண ஆனந்தன், டில்லி விமான நிலைய அதிகாரி புனிதவதி ஞானம்மாள், டில்லி ஐ.ஓ.பி., வங்கி மேலாளர் மேரி எலிசபெத், ரயில்வே அதிகாரி சர்தார், தொழிலதிபர் புருஷோத்தமன் உள்ளிட்ட பழைய மாணவர்கள் 45 பேர், அவர்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் மனைவி மற்றும் குழந்தைகளை அறிமுகம் செய்து வைத்துக்கொண்டனர்.
தங்கள் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தனர். அவர்கள் படித்தபோது எடுத்த குரூப் போட்டோவை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்ததுடன் மனைவி, குழந்தைகளுக்கு காண்பித்து மகிழ்ந்தனர். இறுதியில் அனைவரும் தாங்கள் படித்த வகுப்பு முன் ஒன்று கூடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நாள் முழுவதும் மகிழ்ச்சியாக கழித்த அவர்கள் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக