உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 23, 2011

கடலுரில்அமைச்சர் எம்.சி. சம்பத்துக்கு வரவேற்பு

கடலூர்:

           முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், ஊரகத் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எம்.சி. சம்பத், ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாகக்  கடலூர் வந்தபோது, அவருக்கு எளிமையான வரவேற்பு அளிக்கப்பட்டது.

            அமைச்சர்கள் முதல்முறையாக மட்டுமன்றி, எப்போது வந்தாலும் 50 பக்கங்களுக்குக் குறையாமல் பத்திரிகை விளம்பரங்கள், வழியெங்கும் கொடி தோரணங்கள், கோஷ்டிகள் போட்டி போட்டுக் கொண்டு, நகர வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் வெளியே தெரியாமல் மறைந்து போகும் அளவுக்கு வைக்கும் டிஜிட்டல் பேனர்கள், கட் அவுட்டுகள், அலங்கார வளைவுகள், எங்கும் அமைச்சர்களின் துதிபாடும் கோஷங்கள்தான் கடந்த தி.மு.க. ஆட்சியின் அமைச்சரவைக் கலாசாரம்.

           இந்த சம்பிரதாயங்களையும் சடங்காச் சாரங்களையும் தகர்த்தெரியும் வகையில் ஜெயலலிதாவின் ஆணைப்படி, மிக எளிமையாக, அமைச்சர் எம்.சி. சம்பத்துக்குக் கடலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டதைப் பொதுமக்கள் பலராலும், நம்பவே முடியவில்லை.  மாலை 6-15 மணிக்கு கடலூர் நகருக்குள் வந்த அமைச்சர் சம்பத், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.÷அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் அமைச்சர்  எம்.சி. சம்பத் வாழ்க, ஊரகத் தொழில்கள் அமைச்சர் வாழ்க என்று கோஷமிட்டார்.

             அவரை அமைச்சர் சம்பத் உடனேயே கையசைத்துக் கட்டுப்படுத்தினார். கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் சிலரும் அவரைக் கண்டித்ததுடன், "என்ன அமைச்சரை வீட்டுக்கு அனுப்பப் பார்க்கிறாயா? அம்மா வாழ்க என்பதுடன் நிறுத்திக் கொள்' என்று கூறிக் கட்டுப்படுத்தினர்.  அதைத் தொடர்ந்து, சிலர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அமைச்சர் சம்பத், பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு, சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அங்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் கூடியிருந்தாலும், எங்கும் எளிமையே கோலோச்சி இருந்தது.

            கட்சியினர் பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இந்த எளிமை என்றும் தொடர வேண்டும் என்று பொதுமக்கள் பலர் தூரத்தில் நின்று வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் வருவதற்கு முன்னரே சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் அமைச்சரை வரவேற்கக் காத்து இருந்தனர்.

             அமைச்சர் சுற்றுலா மாளிகை அறையில் நுழைந்ததும், தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு அமைச்சரின் அறைக்குள் நுழைந்து விட்டனர். எனவே சற்று நேரம் காத்து இருந்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தி வரவேற்றனர். அமைச்சரை அ.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச் செயலர்  முருகுமணி, மருத்துவ அணிச் செயலாளர் சீனிவாசராஜா, மீனவர் அணிச் செயலர் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.அய்யப்பன், சிவசுப்பிரமணியன், ஒன்றியச் செயலர் பழநிச்சாமி, நகரச் செயலர் ஆர். குமரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior