கடலூர்:
கடலூர் மாவட்ட ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் பட்டியலை காவல் துறையினர் தயாரித்து வருகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பு ஏற்றுள்ள காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம், தமிழ்நாட்டில் ரௌடிகள் சாம்ராஜ்யம், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.அதன்படி தமிழகம் முழுதும் மாவட்ட வாரியாக ரெüடிகள், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோர், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிப்போர், கடும்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் இப்பட்டியல் கடந்த 2 நாள்களாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 2 நாள்களாக, இரவு பகலாக போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. முக்கியக் குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில், 200 போலீஸôர் ஈடுபட்டு உள்ளனர். மாவட்ட எல்லைப் பகுதிகள், ரயில் நிலையங்கள், பஸ்நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 125 லாட்ஜுகள் சோதனையிடப்பட்டன. கடந்த 2 நாள்களாக நடந்த சோதனைகளில், 109 சந்தேகத்துக்கிடமான நபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
நீதிமன்றப் பிடியாணை நிலுவையில் இருக்கத் தலைமறைவாக இருந்த 32 பேர் கைது செய்யப்பட்டனர்.பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புள்ள 133 பேரை போலீஸôர் கைது செய்து, கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளச் சாராய வழக்குகளில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து விதிகளை மீறி, குடிபோதையில் வாகனங்களை ஓட்டியோர், ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களை ஓட்டியவர்கள் 334 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
புதிய ஆட்சி பொறுப்பு ஏற்று சட்டப்பேரவைக் கூட்டமும் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் காவல் நிலையங்களில் லாக்அப்பில் யாரையும் அடைத்து வைத்து இருக்க வேண்டாம். குற்றச்சாட்டு இருந்தால் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு உடனே அனுப்பி விடவேண்டும், 6 மணிக்கு மேல், பெண்கள் மற்றும் முதியோரைக் காவல் நிலையங்களுக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் காவல் நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக