கடலூர்:
மீன் பிடித் தடைகாலம் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே மீனவர்கள் மீன் பிடிக்கத் தயார் நிலையில் உள்ளனர்.
மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் வங்கக் கடலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 16-ம் தேதி முதல் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இழுவை வலைகளைப் பயன்படுத்தும், பெரிய விசைப் படகுகள் மீன் பிடிப்பதால், கடலில் காணப்படும் சிறிய மீன்கள்கூட பிடிபட்டு விடும். இதனால், மீன் வளத்தைப் பெருக்க இத்தடை விதிக்கப்படுகிறது. தடைக் காலத்தில் சிறிய படகுகள் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகின்றன. மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையும், இவ்வாண்டு உயர்த்தப்பட்டு இருப்பதால், மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பழுதுபார்த்தனர். இன்னும் 3 மாதங்களில் வடகிழக்குப் பருவமழை காலம் வர இருப்பதால், அதற்கு ஏற்ற வகையிலும் படகுகளை பழுது பார்த்துள்ளனர். மீன்பிடித் தடைகாலம் வரும் 29-ம் தேதியுடன் முடிவடைவதால், மீன்கள் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மீனவர்கள் தயார் நிலையில் உள்ளனர். பழுதுபார்க்க எடுத்துச் செல்லப்பட்ட வலைகள் அனைத்தும், படகுகளுக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளன. பழுதுபார்க்க பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்ட படகுகளும் மீன் இறங்கு தளங்களுக்கு வந்த வண்ணம் உள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக