உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 26, 2011

கரும்பில் அதிக மகசூலுக்கு சொட்டுநீர்ப் பாசன முறை




கடலூர் அருகே மருதாடு கிராமத்தில் கரும்புப் பயிருக்கு சொட்டுநீர்ப் பாசன வசதி செய்யப்பட்டு இருப்பதை பார்வையிடுகிறார் வேளாண் துணை இயக்குநர் சந்திரமோகன்
 
கடலூர்:
 
             கரும்புப் பயிருக்கு சொட்டுநீர் பாசனம் கடலூர் மாவட்டத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. 
 
              பாரம்பரிய விவசாயத்தில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் மகசூல் கிடைக்கிறது. கரும்புப் பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்வதால் ஏக்கருக்கு கரும்பு மகசூல் 100 டன் வரை கிடைக்கும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள்.தண்ணீர் தேவையும் உரத் தேவையும் குறைகிறது. உரம் தண்ணீரில் கரைத்து அளிக்கப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கரும்புப் பயிரில் சொட்டு நீர்ப்பாசனம் பிரபலம் ஆகி வருகிறது. கரும்புக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்ள அரசு 65 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. 
 
             டான்ஹோடா என்ற அமைப்பின் மூலமாகவும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமாகவும் இந்த மானியம் வழங்கப்படுகிறது. மானியத் தொகையில் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரத்துக்கு கரைசல் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் வழங்கப்படுகின்றன. மீதம் உள்ள தொகை சொட்டுநீர்ப் பாசனத்துக்கான கருவிகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த மானியம் தனிநபர் விவசாயிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் 20 அல்லது 25 பேரை ஒருங்கிணைத்து குழு ஒன்று பதிவு செய்யப்படுகிறது. இக்குழு மூலம் அதில் உறுப்பினர்களாக உள்ள கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. 
 
            கடலூர் வட்டாரத்தில் கரும்பு துல்லியப் பண்ணை திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் மறுதாடு கிராமத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ள கரும்பு வயல்களை வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வீ.சந்திரமோகன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திருப்தி தெரிவித்ததாக கடலூர் வேளாண் உதவி இயக்குநர் சீ.இளவரன் தெரிவித்தார். துல்லியப் பண்ணை விவசாய திட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொள்வதால் பாசன நீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படுகிறது.  நீரில் கரையும் உரங்களை இடுவதால் நிறைந்த மகசூலுக்கு வழிவகுக்கிறது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்ததாக இளவரசன் குறிப்பிட்டார்.
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior